Skip to main content

எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது... டிடிவி தினகரன்

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

ddd

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நான்கு மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்திருக்கும் சூழலில், அந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி உயர் நீதிமன்றமும் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேநேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பாமல், இங்குள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய அரசும், எதிர்க்கட்சியான திமுகவும் கடந்த காலங்களில் இரட்டைவேடம் போட்டதால், இப்போதும் அவர்களை நம்புவதற்கு தூத்துக்குடி மக்கள் தயாராக இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான வேலைகளைத் தந்திரமாக அதன் உரிமையாளர்கள் செய்துவிடுவார்களோ என்ற பயம் தூத்துக்குடி மக்களிடம் இருக்கிறது. 

 

அவர்களின் இந்த உணர்வினைப் புரிந்துகொண்டு, ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் அடுத்த நான்கு மாதங்களுக்கு நடைபெறுவதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி சென்னை உயர் நீதிமன்றமும் கண்காணித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

 

அதேநேரத்தில் தற்போதுள்ள சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் முடிவை நிறுத்திட வேண்டும். தமிழகத்தின் தேவையே இன்னும் பூர்த்தியாகாத நிலையில், இங்கே உற்பத்தியாகும் ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் வாய்ப்புள்ள மற்ற ஆலைகளில் இருந்து ஆக்சிஜன் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளையும் தாமதமின்றி அரசு மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்