இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுக்கு பின் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியை யாரும் குற்றம் சொல்ல முடியாது. தமிழ்நாடு 2 பிரதமர் வேட்பாளர்களை தவறவிட்டது தேர்தலுக்காக சொல்லப்படுவது இல்லை. இவ்வளவு பெரிய கலாச்சாரம் உள்ள தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னோடியாக இருக்கும் மாநிலம். இங்கிருந்து ஏன் ஒரு பிரதமர் வேட்பாளர் கிடைக்கவில்லை என்பது பல காலமாக உள்ள கேள்வி. அகில இந்திய அளவில் ஒரு முயற்சி எடுக்கப்பட்ட போது ஏன் தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்களே ஆதரிக்கவில்லை. இது எல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான். அதைத்தான் அமித்ஷா மீண்டும் பேசினார். மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டிற்குள் இப்படி அரசியல் செய்து ஏன் உங்கள் அரசியல் மிக பழமைவாத அரசியலாக உள்ளது என அமித்ஷா திமுகவை குற்றம் சாட்டினார்.
குறிப்பாக தமிழ்மொழியை தமிழ்நாட்டை தாண்டி நீங்கள் விடவில்லை. தமிழ்நாட்டிற்குள்ளேயே வைத்திருந்தீர்கள். ஆனால் தமிழ்மொழியை இந்தியா முழுவதும் எடுத்து சென்றால் தான் இந்த மொழிக்கு அழகு. அதை பிரதமர் செய்கிறார். அதிமுக, பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை. தமிழ்நாட்டில் இப்போதுள்ள சூழலின் காரணமாக 39 தொகுதிகளையும் அதிமுக, பாஜக கூட்டணி ஜெயிக்கும். முதலமைச்சருக்கு ஓட்டு பிரிய வேண்டும் என்று ஆசை. ஓட்டு பிரிந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார். தமிழ்நாட்டில் அதிமுக பெரிய கட்சி. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேவேளையில் பாஜக வளர்ந்துவிட்டது. பாஜகவும் அதிக இடத்தில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கை பாஜக தொண்டர்களிடம் உள்ளது” எனக் கூறினார்.