நேற்று முன்தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மானியக் கோரிக்கை உரையின் போது, ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கேள்விக்கு பதில் அளித்தார், “நாலு வருடங்களாக சென்னையில் போட்டி நடக்கவில்லை. ஐபிஎல்லை நடத்துவது பிசிசிஐ. அது யாரென்றால் உங்களது நெருங்கிய நண்பர் அமித்ஷா இருக்கிறார் அல்லவா, அவரது மகன் ஜெய்ஷா தான் அதற்கு தலைமை. நீங்கள் அவரிடம் பேசுங்கள். நாங்கள் சொன்னால் அவர் கேட்கமாட்டார். நீங்கள் சொன்னால் அவர் கேட்பார். நீங்கள் சொல்லி, அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 5 டிக்கெட்கள் கொடுத்தாலும் போதும். நாங்கள் பணம் கொடுத்து கூட அதை வாங்கிக் கொள்கிறோம்” எனக் கூறினார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூடிய பின் பாஜக உறுப்பினர்கள், அமைச்சர் உதயநிதி அமித்ஷா குறித்து பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதை சபாநாயகர் ஏற்காததால் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “உதயநிதி ஸ்டாலின் ஐபிஎல் டிக்கெட்கள் அமித்ஷா மகனிடம் இருக்கிறது என சொல்லியுள்ளார். அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என சொன்னோம். இன்று முதலமைச்சர் கூட எழுந்து நின்று அதில் திரு என்று சேர்க்கப்பட்டிருப்பதாக கூறினார். ஆனால் நேற்று முன்தினம் அவர் பேசும் போது கிண்டலும் கேலியும் இருந்தது. தமிழ்நாட்டுத் தலைவராக கௌதம சிகாமணிதான் உள்ளார். அவர் பெயரை சொல்லி இருக்கலாம். ஆனால் உள்துறை அமைச்சரையும் அவரது மகன் பெயரையும் சொல்லி இருப்பது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என சொன்னோம். அதற்கு அவர்கள் இடம் கொடுக்கவில்லை. ஆகவே 4 சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்” எனக் கூறினார்.