Skip to main content

முதல்வர் சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமான் மனு தள்ளுபடி!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
chennai high court

 

 

முதலமைச்சர் சார்பில் சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, தமிழக அரசின் அதிகாரம் மற்றும் முதல்வர் குறித்தும் கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்தப் பேட்டி அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக கூறி,  சீமான் மீது முதல்வர் பழனிசாமி சார்பில்,  சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி,  சென்னை  உயர்நீதி மன்றத்தில் சீமான் தொடர்ந்த வழக்கில், முதல்வர் பழனிசாமியைப் பற்றி தனிபட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை என்றும், பொது வாழ்க்கையில் அவரது பணி தொடர்பான நடவடிக்கைகள்தான் விமர்சனம் செய்யப்பட்டது என்றும் வாதிடப்பட்டது. எனவே, உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில்தான் பேசியதாகவும், அதனால் வழக்கை ரத்து செய்யவேண்டும் என்றும் சீமான் தரப்பில் வாதிடப்பட்டது.

 

அரசு தரப்பில்,  முதல்வர் குறித்து சீமான் கடுமையான வார்த்தைகள் கொண்டு அவதூறாக பேசியுள்ளதால்,  வழக்கை ரத்து செய்யக்கூடாது  என வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரும் சீமானின் மனுவைத் தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்