நாம் தமிழர் கட்சி துவங்கியதிலிருந்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுவருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் சீமான், வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டுவருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தப் பணிகளை மேற்கொண்டுவருகிறார். இதற்கிடையில் கட்சி துவங்கிய கமல்ஹாசனும் நாடாளுமன்றத்தில் தனித்து போட்டியிட்டார். அப்போது சீமான், “ஒரு தமிழனாக கட்சி துவங்கிய கமலை நான் வரவேற்கிறேன்” எனத் தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கமல்ஹாசனுடன் சீமான் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் அதிமுகவில் சில குழப்பங்கள் ஏற்பட்டது. சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி சென்னையில் இருந்துவருகிறார். மேலும் கடந்த 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளின்போது அவருக்கு மரியாதை செய்துவிட்டு, ச.ம.க. தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர்களைச் சந்தித்தார். அதேபோல் அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் சந்தித்தார். அப்போது, “நீங்களும் திமுக வரக்கூடாது என எதிர்க்கிறீர்கள். எங்களோட நிலைபாடும் திமுக வரக்கூடாது என்பதுதான். அதைவிட முக்கியம், இந்த ஐந்து வருடமாக எடப்பாடியார் ஆட்சியில் இருக்கிறார், அவரும் ஒன்னும் பெரிசா, ஜெயலலிதா இருந்த மாதிரி செய்யல எனும் அதிருப்தி இருக்கு. திமுகவை எதிர்க்கிறீர்கள் அதேபோல் அதிமுகவையும் நீங்கள் எதிர்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும்” என சீமானிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதேபோன்று சரத்குமாரிடமும் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், அதிமுக கூட்டணியில் சரத்குமார் இருப்பதாக சொல்லப்பட்டுவந்த நிலையில், திடீரென ஐ.ஜே.கே. கட்சியுடன் கூட்டணி அமைத்தார். அதனை தொடர்ந்து கமலையும் சந்தித்துள்ளார். கமல்ஹாசன் சரத்குமார் கூட்டணி அமையுமா என்பது விரைவில் தெரியவரும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் சீமானும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கமலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தநிலையில், இப்போதும் அதற்கான முயற்சிகளும் பேச்சுவார்த்தைகளும் நடைபெறுவதாக அக்கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
கமலுடன் சீமான் இணைந்து பயணிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. காரணம் கடந்த சில மாதங்களாக கமலுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துவந்திருந்த பழ.கருப்பையாவும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துவிட்டார். அவர் உட்பட அனைவருமே, ஒன்றிணைந்த ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என சொல்லிவருகின்றனர். அதேவேளையில் தமிழகத்தில் திமுகவையும் அதிமுகவையும் எதிர்க்க நம்மைப் போன்ற சின்ன கட்சிகள் எல்லாம் இணையவேண்டும் என அவரும் சொல்லுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சீமானும் இந்தக் கூட்டணியில் இணைவார் என அக்கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. சசிகலா எடுத்த முயற்சிகளில் சரத்குமார் ஒரு பாதைக்கு வந்துவிட்டார். அடுத்தது சீமானும் சசிகலா சொன்ன பாதையை தேர்வு செய்வார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.