அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி, ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி ஓ.பி.எஸ். அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் , “வரும் 24 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாடு நடத்தப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள், கட்சி துவங்கி 51வது வருடம் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக அந்த மாநாட்டை நாங்கள் நடத்த இருக்கிறோம். அதன் பிறகு மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியினர் திருச்சி மாநாட்டிற்கான பணிகளில் மும்முரம் காட்டிவருகின்றனர். அந்தவகையில், திருச்சி மாநாடு குறித்தான ஆலோசனைக் கூட்டத்தை ஓ.பி.எஸ். நேற்று திருச்சியில் நடத்தினார். இதில், அவரின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக மதுரை விமானநிலையத்தில் ஓ.பி.எஸ். செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர், “முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள் விழா, கட்சி பொன்விழா உள்ளிட்ட மூன்றையும் சேர்த்து திருச்சி நகரில் வருகிற 24-ந்தேதி மிகப்பிரமாண்டமான முறையில் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு கட்சியில் இருந்து முன்பு நீக்கப்பட்ட அன்வர் ராஜா, கே.சி.பழனிச்சாமி போன்ற மூத்த முன்னோடிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கட்சியில்தான் இருக்கிறார்கள். அவர்களும் கண்டிப்பாக விழாவில் கலந்து கொள்வார்கள். மேலும் சசிகலா, டி.டி.வி.தினகரன் போன்றவர்களை முறைப்படி அழைப்போம். இதுகுறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளிவரும். விழாவில் அனைவரும் கலந்து கொள்வார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி சென்ற அவர், அங்கு அவரது ஆதரவாளர்களுடன் ஆலோனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர், ‘நாம் மீண்டும் தொடங்கிய தர்ம யுத்தம் எந்தவித பிசிறும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இறுதியில் நாம் தான் வெற்றியை அடைய போகிறோம். சசிகலா, தினகரன் உள்ளிட்ட அனைவரையும் அழைப்போம், அனைவரையும் மீண்டும் ஒருங்கிணைப்போம். சர்வாதிகார கும்பல் அதிமுகவின் சட்ட விதியை அபகரித்ததை நீக்கும் மாநாடாக இது அமையும்’ என்று பேசியதாக சொல்லப்படுகிறது.