உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனால் இந்தியாவின் முக்கிய பகுதிகளில்,முக்கிய நகரங்களில் மக்கள் தீபங்களை ஏற்றினர். தமிழகத்திலும் பல இடங்களில் வீடுகளில் ஒற்றுமை தீபம் ஏற்றப்பட்டது.
மேலும் பிரதமர் மோடி கூறியதையடுத்து நாடு முழுவதும் 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் வரை பல இடங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் மின்சார பயன்பாடு குறைந்ததால் அதிகமான மின்சாரம் சேமிக்கப்பட்டதாகத் தகவல்களும் வெளியானது. இந்நிலையில் தொலைக்காட்சி பார்வையாளர்களைக் கணக்கிடும் பார்க் அமைப்பு அந்த ஒன்பது நிமிடத்தில் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கை 60% குறைந்தது எனத் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இரவு 8.50 முதல் மக்கள் விளக்கு ஏற்றுவதிலும், டார்ச் அடிப்பதிலும் கவனத்தை திருப்பியதால் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை குறைந்து இரவு 9.30க்குப் பிறகே இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது எனக் கூறியுள்ளது.