மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தொண்டையில் புண் இருப்பதால் சத்தமாகப் பேச முடியாது. இருந்தாலும் மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நீங்கள் ஆத்தூருக்கு வந்தே தீர வேண்டும். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனச் சொல்லியதை அடுத்து அவர்களது அன்புக் கட்டளையை ஏற்று உங்களைச் சந்திக்கிறேன்.
தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் இங்கும் போராட்டத்தை ஒத்தி வைக்க முடிவு இருக்கிறதா? என மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டார்கள். ஆனால், மழை விடாமல் தொடர்ந்து பெய்தாலும் போராட்டம் நடைபெறும் என்றேன். மழையைப் பொருட்படுத்தாமல் மக்களும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் இந்த அரசு மீது. இந்தக் கொந்தளிப்பை வெளிப்படுத்தும் விதமாக மக்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள்'' என்றார்.
இதேபோல் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையிலும் திருச்சி, நெல்லை எனப் பல மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.