தமிழகத்தின் பல மாவட்டங்களின் மழை பொழிந்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே புதுச்சேரிக்கும் ஆந்திரா மாநிலத்தின் நெல்லூருக்கும் இடையே இன்று (17-10-24) கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையொட்டி, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேற்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பெய்து வந்தது. இதனால், சென்னையில் உள்ள புறகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது. இருந்த போதிலும், தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால், சாலைகளில் இருந்த தண்ணீர் அனைத்தும் உறிஞ்சப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டதால், இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதற்கிடையில், மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது, “கடந்த 41 மாத கால ஸ்டாலினின் தி.மு.க ஆட்சியில் தமிழகம் முழுவதும் முறையாகத் திட்டமிடாமல், கேபிள்கள் அமைப்பது, கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால் என்று எங்கு திரும்பினாலும் சாலைகள் உடைக்கப்பட்டு, முச்சந்திகளிலும் பெரும் பள்ளம் (ஜங்ஷன் பாயிண்ட்) தோண்டப்பட்டு அவைகள் சரியாக மூடப்படாமல் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி பல விபத்துக்களும், சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இத்தகைய நிர்வாகத் திறமையற்ற ஒரு அரசை தமிழ் நாட்டு மக்கள் இதுவரை கண்டதில்லை. எனவே, இனியும் இந்த ஏமாற்று விளம்பர அரசை நம்பாமல், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு 2021-ல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா? அதில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் ஸ்டாலினின் தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன? என்பதையெல்லாம் இந்த அரசு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஸ்டாலினின் தி.மு.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து சென்னையில் வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொண்டதைப் பற்றி முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க அரசு, மக்களை ஏமாற்றும் நாடகங்கள் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஆய்வு பணிகளை மேற்கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் வந்தார்களா?. தற்போதையை முதல்வர், எதிர்கட்சித் தலைவராக இருந்த போது நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் என்று சொல்வதற்கே தகுதி இல்லாதவர்” என்று கூறினார்.