பரபரப்பான அரசியல் சூழலில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முக்கியமான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் பானர்ஜி, ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய் சிங், ஜார்கண்ட் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) தலைவருமான சம்பாய் சோரன், ஜே.எம்.எம். கட்சியின் எம்எல்ஏவும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவியுமான கல்பனா சோரன், ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய (என்.சி.பி. - எஸ்.சி.பி.) தலைவர்கள் சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலே, சிவசேனா (யூ.பி.டி.) தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே தொடக்க உரையாற்றுகையில், “இந்தியக் கூட்டணியின் நண்பர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். நாம் ஒன்றிணைந்து போராடினோம். ஒருங்கிணைந்து போராடினோம். முழு பலத்துடன் போராடினோம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 18வது மக்களவைத் தேர்தலின் முடிவு நேரடியாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானது. அவரது பெயரிலும், முகத்திலும் நடந்த தேர்தல், பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை வழங்காததின் மூலம் அவரது தலைமை குறித்து பொதுமக்கள் தெளிவான செய்தியைக் கொடுத்துள்ளனர்.
தனிப்பட்ட முறையில் மோடிஜிக்கு இது அரசியல் தோல்வி மட்டுமல்ல தார்மீக தோல்வியும் கூட. ஆனால் அவர்களின் பழக்கவழக்கங்களை நாம் அனைவரும் அறிவோம். இந்த பொதுக் கருத்தை மறுப்பதற்கு அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்வார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதிக்கான அதன் நோக்கங்களில் உறுதியுடன் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் இந்தியக் கூட்டணி வரவேற்கிறது என்பதையும் இங்கிருந்து தெரிவித்துக் கொள்கிறோம்” எனப் பேசியுள்ளார்.