சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. முதலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மேலும் முலாயம் சிங் யாதவ் உட்பட 7 தலைவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. நேற்றைய அலுவல்கள் நிறைவு பெற்றதை அடுத்து சபாநாயகர் அப்பாவு இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்திவைத்தார்.
மேலும் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை புறக்கணித்துள்ளனர். அதிமுக பொன்விழா ஆண்டில் பங்கேற்பதால் சட்டப்பேரவையில் கலந்துகொள்ளவில்லை என சொல்லப்பட்டாலும் இதற்கு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கியது ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சபாநாயகரை பொறுத்தவரை எண்ணிக்கையின் அடிப்படையில்தான் செயல்பட முடியும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் 62 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஜனநாயக மாண்புடைய மற்றும் விதியை மதிக்கின்ற சபாநாயகராக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அந்தக் கடிதத்திற்கு மதிப்பளித்து எங்களுக்கு உரிய உரிமையை நிலைநாட்ட வேண்டும். அவரின் நடவடிக்கைகளைப் பொறுத்து கட்சி அதைப் பற்றி ஆலோசித்து முடிவு செய்யும்” எனக் கூறியிருந்தார்.
தற்போது சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். எதிர்கட்சித் தலைவராக பன்னீர்செல்வத்திற்கு பதில் உதயகுமாரை நியமிக்கக் கோரி அளித்திருந்த மனுவை அங்கீகரிக்க வலியுறுத்தியுள்ளனர் என தகவல் வெளியானது.
மேலும் சபாநாயகர் தன்னை சந்தித்த எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏக்களிடம், “எதிர்க்கட்சித் துணைத்தலைவர் யார் என்பதை சட்டப்பேரவையில் அறிவிப்பேன்” என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
இதனை அடுத்து சபாநாயகரை சந்தித்த எம்.எல்.ஏக்கள் தற்போது எதிர்கட்சித் தலைவர் பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சபாநாயகருடனான சந்திப்பிற்கு பிறகு சட்டப்பேரவையில் பங்கேற்பது பற்றி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்வார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பன்னீர் செல்வம் தரப்பில் மொத்தம் 4 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் பழனிசாமி தரப்பில் 62 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.