ஜனவரி 6-ந் தேதி கவர்னரின் உரையோடு தொடங்க இருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஐந்து அல்லது ஆறு நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் கவர்னரின் உரையைத் தயாரிக்கும் வேலையில் கோட்டைத் தரப்பு ஜரூராக இருப்பதாக கூறுகின்றனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித் தரப்பு, தன் உரையில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அதிக ஆதரவாக பேசிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையில், பிரிண்டுக்குப் போகும் முன்பே, அந்த உரையைத் தன் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என்று கறாராகச் சொல்லி விட்டதாக கூறுகின்றனர்.
இந்தக் கூட்டத் தொடரிலேயே மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சித் தேர்தலை, மறைமுகத் தேர்தலாக நடத்துவதற்கான சட்ட மசோதாவை, நிறைவேற்றி விடலாம் என்கிற ஆலோசனையில் எடப்பாடி இருப்பதாகவும் தகவல் கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தூத்துக்குடி மாநகராட்சித் தொகுதியை தனித் தொகுதியாக ஒதுக்கியதை மாற்றி பொதுத் தொகுதியாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி "பனங்காட்டுப் படை' கட்சியின் ஹரிநாடார் தலைமையில், நாடார் அமைப்புகள் பலவும் சென்னையில் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருப்பதாகவும் கூறுகின்றனர். இதன் பின்னணியில் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது என்கின்றனர்.