கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவிக்கு கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவியை கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவருக்கு வழங்குவதாக திமுக தலைமை அறிவித்தது. ஆனால், அதை மீறி திமுகவைச் சேர்ந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன் என்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மொத்தம் உள்ள 30 வார்டு உறுப்பினர்களில் 23 உறுப்பினர்களின் ஆதரவோடு தலைவராக வெற்றி பெற்றார். அடுத்து துணைத்தலைவர் பதவியையாவது விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த கிரிஜா திருமாறன் என்பவருக்கு வழங்க வேண்டும் என்று அந்த கட்சியினர் வலியுறுத்தினர். அதையும் மீறி துணைத் தலைவர் தேர்தலிலும் திமுகவைச் சேர்ந்த ஜெயபிரபா என்பவர் 22 உறுப்பினர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றுவிட்டார். இரண்டு பதவிகளையும் திமுகவைச் சேர்ந்தவர்களே கைப்பற்றிக் கொண்டதால் கோபமடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலவற்றை திமுகவினர் கைப்பற்றியதை அறிந்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்று அறிவித்தார். இதையடுத்து கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சி.வி. கணேசன், கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பதவியை அவர்களுக்கே விட்டுக்கொடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் துணைத் தலைவராக வெற்றி பெற்ற ஜெயபிரபா அவரது கணவர் மணிவண்ணன் ஆகியோரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் அந்த பேச்சுவார்த்தையில், கட்சி கட்டுப்பாட்டை மீறக் கூடாது. கட்சி தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கூட்டணி தர்மத்தை நிலைநாட்ட வேண்டும். அதன்படி விடுதலை சிறுத்தை அமைப்பிற்கு பதவியை விட்டு தர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட துணைத்தலைவர் ஜெயபிரபா மணிவண்ணன், தனது பதவியை ராஜினாமா செய்வதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் கணேசன், துணைத் தலைவராக வெற்றி பெற்ற ஜெயபிரபா, நகர செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் கூட்டாக சென்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து துணைத் தலைவர் பதவியை இராஜினாமா செய்து அதை விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த கிரிஜா திருமாறனுக்கு விட்டுக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
அதையடுத்து இன்று துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் ஜெயபிரபா. மேலும், விடுதலை சிறுத்தை கட்சி கிரிஜா திருமாறன் துணைத் தலைவராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.