காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணத்தினை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் வரும் 30ம் தேதி ஜம்மு காஷ்மீரில் முடிவிற்கு வருகிறது. மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான கார்கே தேர்வு செய்யப்பட்டு அவர் தலைமையில் குஜராத், இமாச்சல் போன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியையே தழுவியுள்ளது.
இந்த ஆண்டு 9 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினை வலுப்படுத்தவும் தேர்தலுக்கு ஆயத்தமாகவும் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கவும் காங்கிரஸ் கட்சியினர் செயற்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த தேசிய செயற்குழு கூட்டத்திற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் பிப்ரவரி 24,25,26 ஆகிய தேதிகளில் சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பொருளாதாரம், அரசியல், விவசாயம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.