புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்மன்றத் தொகுதிகளுக்கும் அதிமுக தலைமை வேட்பாளர்களை அறிவித்துள்ளது. விராலிமலை - அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை - மாஜி கார்த்திக் தொண்டைமான், திருமயம் - மா.செ வைரமுத்து, கந்தர்வகோட்டை (தனி) - ஜெயபாரதி (தீர்த்தான்விடுதி ஊ.ம.தலைவர்), ஆலங்குடி - தர்ம.தங்கவேல் (வடகாடு காங்கிரஸ் கட்சியின் தெற்கு மா.செ.வாக இருந்து கடந்த மாதம் அதிமுகவில் இணைந்தவர்), அறந்தாங்கி - மாஜி ராஜநாயகம். இந்த வேட்பாளர் பட்டியல் வெளியானதுமே சலசலப்புகளும் சேர்ந்து வெளியாகியுள்ளன.
திருமயம் தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கம் கே.கே.செல்வகுமார், அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாக காய் நகர்த்தி எடப்பாடி பழனிசாமியிடம் போய் ஆதரவு தெரிவித்ததுடன், கூட்டங்களிலும் கலந்துகொள்ள செய்தார். பிரதமர் மோடி வந்தபோது விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். ஆனால், தற்போது வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லை என்றதும் அவரது ஆதரவாளர்கள் ஆதங்கத்தில் சுயேட்சையாக களமிறங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதனால் அவசரக் கூட்டத்திற்கும் தயாராகி வருகிறார்கள்.
அதேபோல அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் தெற்கு ஒ.செ. பி.என்.பெரியசாமி, முக்குலத்தோரில் தனது சமூகம் அதிகமாக உள்ளது. மற்ற சமூகம் குறைவாக உள்ளது. அதனால் தனக்கு சீட்டு தர வேண்டும் என்று கேட்டிருந்த நிலையில், சீட்டு மறுக்கப்பட்டுள்ளதால் பெரியசாமி தரப்பு அவசர ஆலோசனை செய்து, மற்ற இனத்தவர்களின் ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்க தயாராகி உள்ளார். இதனால் அங்கே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல ஆலங்குடி தொகுதியில் பல வருடமாக கட்சியில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, 49 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்த தர்ம.தங்கவேலுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால், பல நிர்வாகிகளும் கொந்தளித்துள்ள நிலையில், யாரையாவது சுயேட்சையாக நிறுத்தவும் ஆலோசித்து வருகின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது. கடைசி நேரத்தில் சில வேட்பாளர்கள் மாற்றப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக ர.ர.க்களே கூறுகின்றனர்.