கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து எழுதியதற்காக மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை சனநாயக உரிமையான கருத்துச்சுதந்திரத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள இக்கைது நடவடிக்கை, கடும் கண்டனத்திற்குரியது. இதுவரை இல்லாத நடைமுறையாக வழக்கு குறித்து புலனாய்வுசெய்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரைக் கைதுசெய்வதும், அதுகுறித்து பேசுவதற்கும், எழுதுவதற்கும் தடைவிதிப்பதுமான போக்குகள் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். மாணவி மரணத்தில் புலப்படாதிருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத்தரக் கோரியும் இயங்கி வரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் ஏற்கவே முடியாத சனநாயகப் படுகொலையாகும் என்று சீமான் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் சாவித்ரி கண்ணன் அவர்களை கைது செய்து கள்ளக்குறிச்சிக்கு அழைத்து சென்றிருக்கிறது காவல்துறை.வீட்டிலிருந்த அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றிருப்பது கண்டனத்துக்குரியது. உடனடியாக ஊடகவியலாளரை விடுதலை செய்ய வேண்டும் என்று வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் இருந்து போலீசார் சாவித்திரி கண்ணனை அழைத்துச் சென்றனர். எங்கு செல்கிறோம் என்று சொல்லாமல் அழைத்து சென்றதாக கூறப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 10.09.2022 அன்று 153, 153 A, 504, 505(1)(b) IPC r/w 67 of IT Act 2000ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேலும் 11.09.2022 மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஓலக்கூர் காவல்நிலையத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டனர். மேலும் 10 நிபந்தனைகள் விதித்துள்ளனர். இந்த நிபந்தனைகளை தவறும் பட்சத்தில் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 41 A (3) மற்றும் (4)ன் கீழ் கைது செய்யப்படக்கூடும் என தெரிவித்துள்ளனர்.