ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது இரு தினங்கள் முன்பு தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.
தொடர்ந்து நேற்று முன் தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக ‘ஓபிஎஸ் தரப்பினரையும்’ உள்ளடக்கிய பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். இது இடைக்கால ஏற்பாடு மட்டும் தான். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பில் இந்த இடைக்கால உத்தரவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.” எனக் கூறினர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக தென்னரசு தேர்வு செய்யப்பட்டதற்கான ஒப்புதல் சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட்டது.
இன்று இந்த படிவம் ஓபிஎஸ் தரப்புக்கும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே ஓபிஎஸ் தரப்புக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
அவர் செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் ஜெயக்குமாரின் பின்னால் இருந்த கூட்டத்திலிருந்து ஒரு பெண், “ஐயா இரு அணிகளும் ஒன்னா சேருவதுக்கு வாய்ப்பு இருக்கா ஐயா” என இரு முறை கேட்க, ஜெயக்குமார் அவர் பக்கம் திரும்பி தலையை மட்டும் அசைத்தார். அதற்குள் ஜெயக்குமார் உடன் இருந்த வேறு சிலர் “சும்மா இருமா” என்று அதட்ட, அந்த பெண் பேசுவதை நிறுத்திவிட்டு அமைதியானார். அங்கு அந்நேரம் கூட்டத்தில் சிரிப்புச் சத்தமும் கேட்டது. அந்த செய்தியாளர் சந்திப்பு முழுவதும் அப்பெண்ணின் கேள்விக்கு பதில் அளிக்காமலேயே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்றுவிட்டார்.