நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.
அதில், “பணிபுரியும் பெண்களுக்காக விடுதிகள் அமைக்கப்படும். பிரதமர் ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற 2.0 திட்டத்தின் கீழ், 1 கோடி ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீட்டுத் தேவைகள் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் வழங்கப்படும். இதில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2.2 லட்சம் கோடி மத்திய அரசின் உதவியும் அடங்கும். பிரதம மந்திரி சூர்யாகர் முஃப்ட் பிஜிலி யோஜனா மூலம் 1 கோடி குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவதற்கு வீட்டின் மேற்கூரை கூரையின் மேல் சோலார் பேனல்களை நிறுவ தொடங்கப்பட்டுள்ளது.
சிறிய அணு உலைகளை அமைப்பதற்கும், சிறிய உலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், அணுசக்திக்கான புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி செய்வதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும் தனியார் துறையுடன் அரசு கூட்டாக சேர்ந்து செயல்படும். உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% ஆக இருக்கும்.
திவால் சட்டம் மற்றும் திவால் கோர்ட்டுகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தளம் அமைக்கப்படும். கடன் வசூல் தீர்ப்பாயங்கள் வலுப்படுத்தப்படும். மேலும் கடன்களை விரைவாக வசூலிக்க கூடுதல் தீர்ப்பாயங்கள் நிறுவப்படும். 25 ஆயிரம் கிராமப்புற வாழ்விடங்களுக்கு சாலை வசதிகளை ஏற்படுத்த பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா 4 ஆம் கட்டம் தொடங்கப்படும்.
பீகார் மாநிலம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாநிலத்திற்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதியுதவி அளிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம், வெள்ள மேலாண்மை மற்றும் அது தொடர்பான திட்டங்களுக்கு உதவி வழங்கப்படும். இமாச்சலப் பிரதேசம், வெள்ளத்தால் பெரும் இழப்பை சந்தித்துள்ளதால், பலதரப்பு உதவிகள் மூலம் மறுகட்டமைப்புக்கான ஆதரவு வழங்கப்படும். மேலும், நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்புகளால் குறிப்பிடத்தக்க சேதத்தை எதிர்கொண்ட உத்தரகண்ட் மாநிலத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
இந்தியாவின் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தொழில் பயிற்சிக்கான திட்டம் தொடங்கப்படும். இத்திட்டத்தின் படி மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் இன்டர்ன்ஷிப் கொடுக்கப்படும் வகையிலும் , மத்திய அரசு ஒருமுறை ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் வகையிலும் இந்த திட்டம் தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார்.