கடந்த ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் நினைவாக நினைவுச்சின்னம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்து கொண்டிருந்த போது, அவந்திபோராவில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வீரர்களின் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இந்த பயங்கர தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உடல் சிதறி பலியானார்கள். இந்த கோர சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவுற்ற நிலையில், இந்த சம்பவத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக லேத்போராவில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாமில் நினைவுச்சின்னம் ஒன்று எழுப்பப்பட்டு, அது நேற்று திறக்கப்பட்டுள்ளது.
அதில், உயிரிழந்த 40 வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வின் போது, உமேஷ் கோபிநாத் என்ற மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் வீடுகளுக்கும் சென்று, அவர்களின் வீடுகளில் இருந்து எடுத்துவரப்பட்டு மணல் அடங்கிய கலசத்தை சி.ஆர்.பி.எப். அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இது அங்கிருந்த வீரர்கள் மத்தியில் பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியது.