Published on 09/05/2020 | Edited on 09/05/2020
புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதில் மேற்கு வங்க அரசிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்ற அமித்ஷாவின் கருத்துக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பதிலடி கொடுத்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களை அவரது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும் ஷ்ராமிக் ரயில்களை தங்கள் மாநிலத்திலிருந்து இயக்க மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்து வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது. மேலும், இதுதொடர்பாக மம்தா பானர்ஜிக்கு அமித்ஷா எழுதிய கடிதத்தில், "ஷ்ராமிக் ரயில்களை இயக்க மேற்குவங்க அரசிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ரயில்களை மேற்குவங்க எல்லைக்குள் அனுமதிக்க மறுக்கிறது உங்கள் மாநில அரசு. மேற்கு வங்கத்தில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நீங்கள் அநீதி இழைக்கிறீர்கள். உங்களின் இந்தச் செயல் அவர்களை வேதனைப்படுத்தும்." எனக் கடுமையாக சாடியிருந்தார் .
இந்நிலையில் இதற்குப் பதிலடி தரும் வகையில் திரிணாமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருக்கும்போது பல வாரங்களாக மவுனியாக இருந்து, தனது கடைமைகளிலிருந்து தவறிவிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்போது பேசுகிறார்.
பொய் மூட்டைகளால் மக்களை தவறாகத்தான் வழிநடத்த முடியும். தனது சொந்த அரசால் கைவிடப்பட்ட புலம்பெயர்ந்த மக்களை பற்றி அமித்ஷா தற்போது கவலைப்பட்டுப் பேசுவது முரணாக இருக்கிறது. மேற்கு வங்க அரசு மீதான உங்களின் பொய்யான குற்றச்சாட்டுகளை நிரூபியுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.