ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நபரை வீடியோ எடுத்தபோது தப்பித்துச் சென்ற கொள்ளையனின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
நாட்டில் ஆங்காங்கே கொள்ளை சம்பவங்கள் அரங்கேறுவது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. வீடு புகுந்து கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது என திருடர்கள் தங்களது கை வண்ணத்தை காட்டிக்கொண்டே இருக்கின்றனர். இத்தகைய சூழலில் சில சிரிப்பான சம்பவங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது தெலுங்கானாவில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் நர்சாபூர் பகுதிக்கு அருகே உள்ளது மேடக் நகராட்சி. இந்த பகுதியில் Axis Bank ATM ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி இரவு 11 மணியளவில் முகம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இந்த ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் பணம் தான் எடுக்கப் போகிறார் என நினைத்தால், பாக்கெட்டில் இருந்த ஸ்க்ருவ் ட்ரைவை (screw driver) எடுத்து ஏடிஎம் மெஷினை அக்கு அக்காக உடைத்துக்கொண்டிருந்தார். நீண்ட நேரமாக ஏடிஎம் மெஷினுடன் மல்லுக் கட்டிக்கொண்டிருந்த அந்த நபர், என்னடா ஏடிஎம் இது.. பணம் எங்க இருக்குனே தெரியலயே... இந்த மிஷின வெச்சிக்கிட்டு நா படுற பாடு இருக்கே. அய்யய்யோ.. ரொம்ப கஷ்டம்டா’ என குனிஞ்சி நிமிந்து மீண்டும் கொள்ளை முயற்சியில் சீரியஸாக இறங்கினார். இதை அந்த வழியாக சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் பார்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் தன் செல்போனில் உள்ள வீடியோ கேமராவை ஆன் செய்து ஏடிஎம் மிஷினை உடைக்கும் கொள்ளையரை வெளியே நின்றுகொண்டு முழுவதுமாக படம்பிடித்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கொள்ளையர், ‘யாரிது? செல்போன மூஞ்சிக்கு நேரா காட்டி என்னமோ பண்ணிக்கிட்டு இருக்கான்’ என்பதுபோல் பதற்றம் அடைந்துள்ளார். அதன்பிறகு, ஹலோ பிரதர்.. ஒரு நிமிஷம் இங்க வாங்க.. செல்போன வெச்சி என்ன பண்றீங்க என கேட்க, அது ஒன்னுலணே... எனக்கு வேல வெட்டி எதுவும் இல்ல.. இந்த மாதிரி கொலை, கொள்ளை பண்றவங்கள வீடியோ எடுத்து போலீஸ் கிட்ட கொடுத்தா நமக்கு பெருசா ரிவார்டு கொடுப்பாங்கணே" என பேசுவது போல் சீன் உருவானது. அதே சமயம், வெளியே வந்த நபர் விருட்டென நடந்து அங்கிருந்து தப்பிவிட்டார். மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சி போலீசிடம் கிடைக்க, அவர்கள் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட நபரை அலேக்காக தூக்கி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, இதுதொடர்பான வீடியோ காட்சி சோசியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.
- சிவாஜி