Skip to main content

விவசாயிகள் போராட்டம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

supreme court

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ட்ராக்டர் பேரணி, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திய விவசாயிகள், தொடர்ந்து டெல்லி எல்லைகளில் முகாமிட்டுள்ளனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாதவரை, வீடு திரும்ப போவதில்லை என அவர்கள் எல்லையில் உறுதியாக இருக்கின்றனர்.

 

இதற்கிடையே நொய்டாவிலிருந்து டெல்லி செல்லும் சாலையை விவசாயிகள் ஆக்கிரமித்துள்ளதால், நொய்டாவிலிருந்து டெல்லி செல்ல 20 நிமிடங்களுக்குப் பதிலாக இரண்டு மணிநேரம் ஆவதாகவும், எனவே அந்த சாலையை ஆக்கிரமித்துள்ளவர்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த உத்தரப்பிரதேச அரசு, சாலைகளை மறிப்பது சட்டவிரோதமானது என விவசாயிகளுக்குப் புரியவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதேநேரத்தில் விவசாயிகள் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பதால் அவர்களை அப்புறப்படுத்துவது கடினம் எனவும் தெரிவித்திருந்தது.

 

இதனைத்தொடர்ந்து இன்று இந்த வழக்கை விசாரித்து உச்சநீதிமன்றம், மத்திய அரசும், உத்தரப்பிரதேச ஹரியானா அரசுகளும் சாலைகள் விவசாயிகளால் மறிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் உடனடியாக தீர்வை கண்டறியவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், "நீங்கள் தீர்வைக் கண்டறிய வேண்டும். அவர்களுக்கு (விவசாயிகளுக்கு) போராட்டம் நடத்த உரிமை உண்டு. ஆனால் போக்குவரத்து தடைப்படக்கூடாது. சாலைகளை மறிப்பது மற்றவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மக்களின் நடமாட்டம் தொந்தரவு செய்யப்படக்கூடாது" எனத் தெரிவித்துள்ளது.

 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஹரியானா, உத்தரப்பிரதேச அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம் வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்