கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கிரண் மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள ராஜ்சமந்த் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான கிரண் மகேஸ்வரி (59) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக சிகிச்சையிலிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜக சார்பில் போட்டியிட்டுத் தொடர்ந்து மூன்று முறை ராஜ்சமந்த் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கிரண் மகேஸ்வரியின் இறப்புக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ட்விட்ரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் “பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிரண் மகேஸ்வரி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைகிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், ஏழைகள், விளிம்புநிலை மக்கள் முன்னேற்றத்துக்கும் ஏராளமான பணிகளை மகேஸ்வரி செய்துள்ளார். மகேஸ்வரியின் குடும்பத்தாருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார். இதேபோல பாஜகவின் மூத்த தலைவர்கள், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கிரண் மகேஸ்வரியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.