ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் ஃபாரூக் அப்துல்லா. தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான இவர், ஜம்மு காஷ்மீரின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 83 வயதான ஃபாரூக் அப்துல்லா, இம்மாத தொடக்கத்தில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.
இந்தநிலையில், அவருக்கு தற்போது கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவரது மகனும், ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், ஃபாரூக் அப்துல்லாவிற்கு சில கரோனா அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உமர் அப்துல்லா, "கரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வரை, நான் எனது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களோடு தனிமைப்படுத்திக்கொள்கிறேன். கடந்த சில நாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும், கண்டிப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.