Skip to main content

அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராகும் ரிலையன்ஸ் ஜியோ...

Published on 03/10/2018 | Edited on 03/10/2018

2016 -ஆம் ஆண்டு 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி மற்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடிதந்த ரிலையன்ஸ் ஜியோ, தற்போது 5ஜி தொலைதொடர்பு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. மத்திய அரசு 2020-ஆம் ஆண்டிற்குள் 5ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது. இதற்காக 22 பேர் கொண்ட குழு அமைத்து திட்டமிடப்பட்டும் வருகிறது. 5ஜி சேவையானது 4ஜி சேவையைவிட பல மடங்கு அதிவேகமாக இயங்கும் திறன் கொண்டது. 5ஜி வேகம் ஒரு வினாடிக்கு 1 GB முதல் 100 GB வரை இருக்கும்.

 

jj

 

4ஜி சேவையில் தற்போது இயங்கிவரும் ரிலையன்ஸ் ஜியோ 215 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தொடங்கப்பட்ட 22 மாதங்களில் 200 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்து சாதனைப் படைத்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 290 நிமிடங்களுக்கு மேல் ஜியோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்கு டேட்டா(DATA) பயன்பாடு 240 கோடி ஜிபிக்கும் அதிகமாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ உலகின் மிகப்பெரிய டேட்டா நெட்வொர்க்காக உள்ளது. இரண்டு ஆண்டுகளில் மட்டும் இரண்டு மடங்கு டேட்டா(DATA) பயன்பாடு அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சேவையில் வாய்ஸ் கால்களின் பயன்பாடு ஒரு நாளைக்கு 530 கோடி நிமிடங்கள் வரை அதிகரித்துள்ளது. ஒரு மாதத்திற்கு வீடியோ நுகர்வு 340 கோடி மணி நேரமாக அதிகரித்துள்ளது. 
இனி வரும் காலங்களில் தொலைத்தொடர்புத் துறைக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் மிக அவசியம் என்பதால் அதற்கான கட்டமைப்புகளை செய்துவருகிறது ஜியோ. 5ஜி அலை வரிசைக்கு ஏற்ற வகையில் உபகரணங்கள், சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டிய முன்னேற்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.  4 ஜி சேவையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது ஜியோ. மற்றத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 15 வருடங்களுக்குப் பின்புதான் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்று உள்ளது. ஆனால் ஜியோ இந்த இரண்டு வருடங்களில் 20 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேல் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

முன்பு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 1GB டேட்டாவை 300 ரூபாய் என ஒரு மாதத்திற்கு தந்து கொண்டிருந்தன. ஜியோவின் அறிமுகத்திற்கு பிறகு மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்களின் நிலையை மாற்றிக் கொண்டது. தற்போது நாள் ஒன்றுக்கு 1GB DATA பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. ஜியோ சேவையின் மூலம் சில நிறுவனங்கள் தங்களின் நிலையில் மாற்றம் கொண்டு வந்தாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பெரும் சரிவை சந்தித்து வருவது கவனிக்கத்தக்கது.  

 

jj

 

3ஜியில் இருந்து 4ஜி சேவைக்கு மாறுவதற்கு ஏற்பட்ட காலத்தை விட 4ஜி சேவையிலிருந்து 5ஜி சேவைக்கு மாறக் குறைவான காலமே ஆகும். அந்தளவிற்கு கட்டமைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் வேகமாக அமைக்க திட்டமிட்டு வருகின்றன தொலைத்தொடர்பு நிறுவனங்கள். 5ஜி சேவைகளை சோதனை செய்ய ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் (BSNL) ஆகியவற்றுடன் ஜியோவையும் அழைத்துள்ளது தொலைத்தொடர்புதுறை.

 

2019 -ஆம் ஆண்டின் இறுதியில் 4ஜி சேவையைவிட 50 முதல் 60 மடங்கு வேகமான 5ஜி சேவைக்கான ஏலம் நடைபெறும் என்று சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏலம் அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் 5ஜி சேவையை நடைமுறைபடுத்தும் அளவுக்கு ஜியோவின் கட்டமைப்புகள் உள்ளது. 2016 செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி குறைந்த விலையில் ரிலையன்ஸ்  4ஜி சேவையை அறிமுகப்படுத்தி இணைய உலகில் புரட்சியை ஏற்படுத்தினார். இந்த நிலையில் 5ஜி சேவையை தொடங்குவதிலும் முனைப்புக் காட்டி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ. 2020-ஆண்டின் மத்தியில் ஜியோ தனது சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்