காஷ்மீரில் 77 ஆவது நாளாக மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் சாலைகளில் ஓடாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை சந்தை என்ற ஒரு சந்தையில் மட்டும் டஜன் கணக்கில் திறக்கப்பட்ட கடைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு படத்தைக்கூட வெளியிட அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்று மீடியாக்கள் குறைக்கூறுகின்றன.
ஆனால், மாநிலம் முழுக்க மக்களின் அன்றாட வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சில பகுதிகளில் மட்டுமே கடைகள் சில மணி நேரம் திறந்திருப்பதாகவும், இணையதளச் சேவைகள் தொடர்ந்து கிடைப்பதில்லை எனவும், பெரும்பாலான முதல் நிலை, இரண்டாம் நிலை பிரிவினைவாத தலைவர்கள் தொடர்ந்து பாதுகாப்புச் சட்டத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
தடுப்புக்காவல் சட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் மெஹபூபாவும், ஒமர் அப்துல்லாவும் சிறையிலோ, வீட்டுச்சிறையிலோ அடைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவோ, பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.