
இந்தியா முழுவதும் கரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் கரோனா பரவல் அதிகமாக இருந்துவருகிறது. கடந்த 24ஆம் தேதி 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.
அதனைத்தொடர்ந்து நேற்று (25.08.2021) ஒரேநாளில் 31,445 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு உறுதியானது. கேரளாவில் ஓணம் போன்ற பண்டிகைகளை முன்னிட்டு அண்மையில் கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த தளர்வுகளாலேயே கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துவருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்தநிலையில், கேரள அரசு கரோனாவை சரியாக கையாளவில்லை என கூறி இளைஞர் காங்கிரஸார், அம்மாநில தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், கரோனா பரவலால் கேரளா ஐசியுவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "இது, கேரளா ஐசியுவில் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக நடைபெறும் அடையாள போராட்டம். அதனை (கேரளாவை) ஆம்புலன்சில் தூக்கிச் செல்வதற்கு முன்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.