ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றார். இத்தகைய சூழலில் கடந்த 28 ஆம் தேதி (28.06.2024) தான் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று (03.07.2024) அளித்தார். அதே சமயம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். இந்நிலையில் ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில முதல்வராக ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் இன்று (04.07.2024) மாலை 5 பதவியேற்றார். அப்போது அவருக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு விழாவில் ஹேமந்த் சோரன் தந்தையும் மற்றும் ஜே.எம்.எம். கட்சியின் தேசிய தலைவருமான ஷிபு சோரன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.