சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு ஒரு நதியை பற்றியது. ஆம் மோடி மக்களைப் பார்த்து இப்படித்தான் கூறினார்.
"நாட்டு மக்களே குஜராத் மாநிலத்தில் ஒரு அழகான நதி உள்ளது அதுதான் சர்தார் சர்வேயர் நதி இதன் நீண்ட அழகு உங்களை பிரமிக்க வைக்கும் இந்த நதியை காண வாருங்கள்" என மோடியின் அறிவிப்பு இருந்தது. இந்த செய்தியும் சர்தார் சர்வேயர் நதியை பற்றியதுதான்.
மகாநதியான பிரம்மபுத்ராவில் தொடங்கும் நர்மதை ஆறு மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா என மூன்று மாநிலங்களுக்கு பரந்து விரிந்து சென்று எக்காலத்திலும் வற்றாத ஜீவநதியாக இது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மூன்று மாநில விவசாயத்திற்கும் மக்களின் குடிநீருக்கும் முழுமையாக பயன்கொடுக்கும் இந்த நதி ஒவ்வொரு வருடமும் கடலில் ஏராளமான நீரை வீணாக கலக்கிறது. இந்த நர்மதை ஆற்றில் உள்ள மிகப்பெரிய அணைதான் குஜராத்தில் உள்ள சர்தார் சர்வேயர் அணை. இந்த அணை பற்றி நீண்ட நெடிய வரலாறு உண்டு. இந்த அணை நீர் வெளியேறும் இடத்தில்தான் சமீபத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை மிகப் பிரமாண்டமாக நிறுவப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இந்த நர்மதை ஆற்றை பாதுகாக்கக்கோரி சமூக சேவகர் மேதா பட்கர் 1994இல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து 24 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அந்த செய்தி இந்தியா முழுக்க அப்பொழுது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்திய தலைவர்கள் பலர் உண்ணாவிரதமிருந்த மேதாபட்கரை நேரில் சந்தித்து அந்த உண்ணாவிரத்தை முடித்து வைத்தனர்.
அதேபோல்தான் இப்போது சமூக போராளியான மேதா பட்கர் இன்றுடன் 9-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். உணவு மட்டுமல்லாமல் குடிநீர் கூட அருந்தாமல் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் அவரது கோரிக்கை என்பது இந்த அணை பற்றிதான். இந்த சர்தார் சர்வேயர் அணை உயரம் ஆரம்பத்தில் 122 மீட்டர் இருந்தது அதன் பிறகு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி வந்த போது 128 மீட்டராக உயர்த்தப்பட்டது.
இந்த அணை உயரம் உயர்த்தப்படும் போதெல்லாம் இந்த அணையை சுற்றி வாழ்கிற பழங்குடிமக்கள் கிராமவாசிகளின் வாழ்விடங்கள் அணை நீரால் சூழப்பட்டு தங்களது வீடுகள் மட்டுமில்லாமல் வாழ்வாதாரத்தையும் இழக்கிறார்கள். இப்போது இந்த அணையின் உயரம் என்பது 139 மீட்டராக உள்ளது. அணையில் தேக்கப்பட்டிருக்கிற தண்ணீர் 138 மீட்டர். இதனால் மத்திய பிரதேசத்திலுள்ள சுமார் 192 கிராமங்கள் இந்த அணைக்குள் மூழ்கி வருகிறது. இந்த கிராமத்தில் வாழும் மக்கள் முழுமையாக தங்களது வீடுகளை இழந்து விவசாய நிலங்களை இழந்து இப்பொழுது நடுத்தெருவில் உள்ளார்கள்.
இதை மையமாக வைத்துதான் மேதாபட்கர் இந்த அணையின் உயரத்தை நீட்டிக்க கூடாது மேலும் இந்த அணையில் தேக்கப்பட்டுள்ள நீர் இருப்பை 128 அடியாக குறைக்க வேண்டும் இந்த அணை நீரை சுற்றியுள்ள மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அவர்களுக்கு தேவைப்படும் இழப்புகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திதான் இன்றோடு தொடர்ந்து ஒன்பதாவது நாளாக தன்னுடைய உடலை வருத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மத்திய அரசு மேதா பட்கரின் உண்ணாவிரதத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இவர் உண்ணாவிரதம் இருக்கும் இடம் மத்திய பிரதேசத்திலுள்ள பட்வானி என்ற பகுதியாகும், மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் அரசு மேதா பட்கர் உண்ணாவிரத்தை முடித்து கோரி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் இந்த அணை உள்ள குஜராத் மாநில அரசு எந்த பதிலும் கூறாமல் உள்ளது. குஜராத் மாநில அரசும், மத்திய அரசும் மேதாபட்கர் விஷயத்தில் கவனம் செலுத்தாதது இந்தியா முழுக்க உள்ள சமூக சிந்தனையாளர்கள், சமூகவியல் செயல்பாட்டாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் மேதா பட்கரின் உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது. தற்போது அவர் பேசும் திறனையும் இழந்து வருகிறார் என கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் அவரது உயிருக்கு ஆபத்து நேரலாம் என அஞ்சுகிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள். மேதா பட்கரின் காலவரையற்ற உண்ணாவிரதம் இந்தியாவில் ஒரு செய்தியாக பெரும்பாலான ஊடகங்கள் வெளியிடவில்லை என்பதும் வேதனையான ஒன்று.