சத்தீஷ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அரண்பூர் பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக அம்மாவட்ட காவல் படையைச் சேர்ந்த காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் (26.04.2023) அரண்பூர் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்பின் அவர்கள் திரும்பிச் செல்லும் பாதையில் வைக்கப்பட்ட குண்டு, வாகனம் கடக்கும் போது வெடித்ததில் 10 காவலர்கள் மற்றும் வாகனத்தின் ஓட்டுநர் உயிரிழந்தனர்.
இது குறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல், ''காவலர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நக்சல்களுக்கு எதிரான சண்டை இறுதிக்கட்டத்தில் உள்ளது. அவர்களை ஒருபோதும் விட மாட்டோம்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று (27.04.2023) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உயிரிழந்த வீரர் ஒருவர் உடல் இருந்த சவப்பெட்டியை தன்னுடைய தோளில் சுமந்து சென்றார். அதன் பிறகு அவர் பேசுகையில், "போலீசாரின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது. நக்சலைட்களுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும். இந்த தாக்குதலினால் எங்களுடைய உணர்ச்சி சார்ந்த மனநிலை பாதிக்கப்படாது. தொடர்ந்து நாங்கள் போராடுவோம். இதில் சம்பந்தப்பட்ட 2 நக்சலைட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’’ என்றார்.