இந்தியாவே எதிர்பார்த்திருந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகளின் மொத்த பார்வையும் கர்நாடகத் தேர்தலை நோக்கியே இருந்தது. இதன் காரணமாகத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜகவும், இழந்த ஆட்சியை மீட்டெடுக்கக் காங்கிரஸும் வியூகம் வகுத்தன. சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரதமர் மோடி, அமித்ஷா என இரு கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தென்னிந்தியாவில் பாஜக வசம் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடக என்பதால், பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ஏராளமான வாக்குறுதிகளையும் அள்ளி வீசியது. மற்ற மாநில பாஜக முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் என அடுத்தடுத்து முக்கிய புள்ளிகளை இறக்கி பிரச்சாரம் செய்தது பாஜக தலைமை. இப்படியாக பாஜகவின் வியூகம் இருக்க, ஒற்றுமை பயணத்தின் சூடு குறையாமல் கர்நாடகாவே கதியெனக் கிடந்த ராகுல், கிடக்கிற கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்துகொண்டிருந்தார். கல்லூரி மாணவர்களுடன் உரையாடல், டெலிவரி பாயுடன் சாப்பாடு என அடுத்தடுத்து கர்நாடக மாநில மக்களின் செல்பி நாயகனாகவே மாறிப்போனார்.
பிரதமர் மோடியோ இந்தத் தேர்தலுக்காக 20 முறைக்கும் மேல் பிரச்சாரத்திற்காகக் கர்நாடகா வந்திருந்தார். பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தின் போது, பெங்களூருவில் உள்ள கோன குண்டே சோமேஷ்வரா கோயிலில் சிறப்புப் பூஜை செய்து வழிபாடு செய்து, மைசூரு தலைப்பாகை அணிந்து, காவி நிறத்திலான பிரச்சார வாகனத்தில் பிரதமர் மோடி நின்றவாறு சாலை பேரணி மேற்கொண்டார். 26 கிமீ தூரம் திறந்த வாகனத்தில் நின்றவாறு பயணித்து பிரதமர் மோடி 13 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்தார்.
இப்படியாக இருகட்சிகளின் பிரச்சாரங்கள் முடிந்து, கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு இன்று (13ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் ஒரு மணிநேரத்தில் பாஜகவும், காங்கிரஸும் சம பலத்துடன் இருந்த நிலையில், அடுத்தடுத்து அனைத்து தொகுதிகளிலும், பாஜகவை பின்னுக்குத் தள்ளி ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை தொகுதிக்கும் மேல் முன்னிலை வகித்தது. குறிப்பாக பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த 15 பேர் தங்களது தொகுதியில் தோல்வியைத் தழுவியுள்ளனர். மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கர்நாடக பாஜகவின் தலைவர் எடியூரப்பாவும், முதல்வருமான பசவராஜ் பொம்மையும் தங்கள் தோல்விகளை ஒப்புக்கொண்டுள்ளனர். இப்படி பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும், பிரச்சாரம் செய்தும், பிரதமரின் சாலை பிரச்சாரம் கூட எடுபடாமல் போனது பாஜக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.