Skip to main content

மாநில அந்தஸ்து போராட்டம்; முறிகிறதா பாஜக அதிமுக கூட்டணி

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

 BJP-AIADMK alliance breaking  in pondicherry

 

புதுச்சேரி மாநில அந்தஸ்து இல்லாததால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் சமீபத்தில் முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்து இருந்தார். முதலமைச்சரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. என்.ஆர்.காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தும் முரண்பட்ட கருத்துகள் எழுந்தன. முதலமைச்சர் ரங்கசாமி மீது குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன. அதேசமயம் 'மாநில அந்தஸ்து என்பது அரசியலுக்காகப் பேசப்படுகிறது' என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் கூறினார்.

 

இத்தகைய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அ.தி.மு.க யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

 

 BJP-AIADMK alliance breaking  in pondicherry

 

அதையடுத்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு காரணமாகத் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஆட்டோக்கள் இயங்கவில்லை. புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பஸ்கள் மட்டுமே இயங்குகின்றன. குறைவான அளவில் பஸ்கள் இயங்குவதாலும், ஆட்டோக்கள் இயக்கம் பாதிப்பாலும் சாலைகள் வெறிச்சோடின. மேலும் நேரு வீதி, காந்தி வீதி, காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு ஒரு சில கடைகள்  காவல்துறை பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தினால் நகரம் மற்றும் கிராமப்புறங்களிலும் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில், புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் புறப்பட்ட அரசுப் பேருந்து முதலியார்பேட்டை காவல் நிலையம் அருகே கல் வீசித் தாக்கப்பட்டது. இதேபோன்று கடலூர் சென்ற தனியார் பேருந்து மரப்பாலம் சந்திப்பில் மர்ம நபர்களால் கல் வீசித் தாக்கப்பட்டது. இதனால் முதலியார்பேட்டை பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. இதேபோல் டெம்போக்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கியதில் 2 டெம்போக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் மாற்று வழி இல்லாததால் சாலையில் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

 

 BJP-AIADMK alliance breaking  in pondicherry

 

மேலும்  முன்னெச்சரிக்கை காரணமாக அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் அந்தந்த பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புத்தாண்டு, பொங்கல் நெருங்கி வரும் நிலையில் திடீர் பந்த் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கூட்டணியில் உள்ள அ.தி.மு.க அரசுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் முறிவு ஏற்படலாம் என பேசப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்