பீகார் துணைமுதல்வர் கார்மீது கல்வீச்சு: ஆறு பேர் கைது!
பீகார் மாநில துணைமுதல்வர் சுசில்குமார் மோடியின் கார்மீது நேற்று மாலை சிலர் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், ராஷ்த்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை பீகார் மாநில துணைமுதல்வர் சுசில்குமார் மோடி, தனது பாஜக கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ அச்சுதானந்த் சிங் என்பவரின் தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் பயணம் செய்த காரின்மீது சிலர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் இருந்து சுசில்குமார் எந்தவித தாக்குதலும் இன்றி தப்பினார். ஆனாலும், அவரது பாதுகாப்பிற்காக வந்த நான்கு கார்கள் சேதமடைந்தன.
சுசில்குமார் ‘ஆர்.ஜே.டி கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் தாக்குதல்களில் ஈடுபட்டனர் என்றும், அவரது கார் தாக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் ஆர்.ஜே.டி கட்சி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் கடந்து சென்றார்’ என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை லாலு பிரசாத் யாதவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், தனது கட்சியின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கை இதுவென்றும் தெரிவித்துள்ளார்.
சுசில்குமாரின் கார் தாக்கப்பட்ட பகுதி ராஷ்த்ரிய ஜனதா தளம் கட்சியின் கோட்டை என அழைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 150-க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
- ச.ப.மதிவாணன்