புதுச்சேரியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர்கள் விரும்பி பார்க்கும் புராதன கட்டிடங்களை பாதுகாக்கவும், அதை புனரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பிரஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என வர்ணிக்கப்பட்ட புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. அதில் 1827 ஆம் ஆண்டு புதுச்சேரி கடற்கரையோரம் உள்ள தூமாஸ் தெருவில் கட்டப்பட்ட பிரெஞ்சு பெண்கள் பள்ளியாகும். இது ஆசியாவிலேயே பெண்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் பள்ளி என அறியப்படுகின்றது. பிரெஞ்சு ஆட்சி வெளியேறியவுடன் இதை புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை ஏற்று அரசு பெண்கள் பள்ளியாகவே நடத்தி வந்தது.
தற்போது கட்டிடத்தின் உறுதித் தன்மையை இழந்ததால் கடந்த 8 ஆண்டுகளாக இந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டு இங்கு பயின்ற மாணவிகள் வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்கள். இந்த கட்டிடத்தை உணவகமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதை பழமை மாறாமல் அதே பெருமையுடன் பெண்கள் பள்ளியாக அமைக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு பொலிவுறு நகர மேம்பாட்டுத் திட்டத்தின் படி 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசுப் பள்ளியை ரூ.8.22 கோடி செலவில் பாரம்பரிய மிக்க கல்வி நிறுவனமான விடுதியுடன் கூடிய இளம் பெண்கள் பள்ளியாக மறுசீரமைப்பு செய்வதற்கு முடிவு செய்து அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்கள். இரண்டு ஆண்டுக்குள் பிரெஞ்சு மற்றும் மேற்கத்திய கட்டிடக்கலையில் இந்த பள்ளி கட்டப்படவுள்ளது.