கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக உணவு மற்றும் பணம் இன்றி 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் டெல்லியில் தவித்து வருகின்றன.

கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில், இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளது. மேலும், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தெற்கு டெல்லியின் சத்தர்பூரில் ஃபதேபூர் பெரியில், ஊரடங்கு காரணமாக உணவு மற்றும் பணம் இன்றி 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்து வருகின்றன. தினமும் வேலைக்குச் சென்று, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்த இவர்கள், கடந்த 4 நாட்களாக வேலைக்குச் செல்ல முடியாததால் கையிலிருந்த பணம் மற்றும் உணவுப்பொருட்கள் தீர்ந்துபோன நிலையில் தவித்து வருகின்றனர்.
அப்பகுதியில் வசிக்கும் பீகாரைப் பூர்வீகமாகக் கொண்ட அமிமா என்ற பெண் இதுகுறித்து கூறுகையில், "எங்கள் குழந்தைகள் கடந்த 2 நாட்களாகத் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர்பிழைத்து வருகின்றனர். இப்படிப்பட்ட நேரத்தில் நில உரிமையாளர்கள் மாதாந்திர வாடகை கேட்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் எங்களைக் காப்பாற்ற அரசாங்கம் எதாவது உதவி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கை முன்னிட்டு, கூலித் தொழிலாளிகளுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை, வீடு இல்லாதவர்களுக்கு முகாம்கள் என டெல்லி அரசு பல சலுகைகளை வழங்கி வந்தாலும், இவ்வுதவிகள் மக்களிடம் சரியான நேரத்தில் முறையாக சென்றடைகின்றனவா என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் மக்கள்.