துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ஓபிஎஸ் சொத்து வாங்கியதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது ஊழல் தடுப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையில் துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள சொத்துக்கணக்கில் முரண்பாடு உள்ளது என்று ஓபிஎஸ் மீதான ஊழல் வழக்கு மனுவில் திமுக அமைப்புச்செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்போது ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள சொத்து விவரம், வருமான வரித்துறையில் ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள சொத்துப்பட்டியலில் வேறுபாடு உள்ளது.
ஓபிஎஸ் மனைவி, மகன்கள், மகள் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் உள்ளன. அனைத்து விவரத்தையும் வருமான வரித்துறையிடம் ஓபிஎஸ் தெரிவிக்கவில்லை. மணல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியுடன் ஓபிஎஸ்ஸுக்கு நேரடி தொடர்பு உள்ளது. ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு பெயரில் 200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
வருமான வரி, அன்னிய செலாவணி, பினாமி சட்டங்களை ஓபிஎஸ் மீறியுள்ளதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் ஓபிஎஸ் மீறிவிட்டார் என்று மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே, இந்த புகாரின் மீது ஊழல் தடுப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி திமுக சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.