
வழக்கு விசாரணைக்காக பேராசிரியை நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்திற்கு இன்று அவர் அழைத்து வரப்பட்டார். இதையொட்டி வழக்கத்திற்கு மாறாக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். செய்தியாளர்கள் யாரையும் நீதிமன்றத்தின் உள்ளே நுழையவிடாமல் போலீசார் தடுத்துவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல், வழக்கில் சம்பந்தப்பட்ட முருகன் வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் இந்த வழக்கு விசயமாக முருகனிடம் பேச முற்பட்டபோது கூட, இன்ஸ்பெக்டர் பவுல் பேசக்கூடாது என்று தடுத்துவிட்டார். இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன என்று போலீசிடம் கேட்டபோது, இது நீதிமன்றத்தின் உத்தரவு என்று தெரிவித்தனர். இது உண்மைதானா என்பதை தெரிந்துகொள்ள, வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், மாஜிஸ்திரேட் சுமதி சாய்பிரியாவிடம் முறையிட்டார். இத்தனை கெடுபிடிக்கும் காரணம், நீதிமன்றமோ, தனது உத்தரவோ எதுவும் இல்லை என்று கூறினார். மேலும், ஏன் இத்தனை கெடுபிடி செய்கிறீர்கள் என்று போலீசாரிடம் கேட்டார். ஆனால், அதன் பின்னரும் போலீசார் அராஜகமாக செய்தியாளர்களை நிர்மலாதேவி அருகே சென்றுவிட முடியாதபடி செய்தனர். ’சென்றமுறை விசாரணைக்காக வந்த நிர்மலாதேவி நிருபர்களிடம் வாய்திறந்ததால் இந்த முறை இத்தனை கெடுபிடி செய்கிறீர்கள். இது மேலிட உத்தரவா?’என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல மறுத்தனர் போலீசார்.


