Skip to main content

‘குரூப் 2, குரூப் 2ஏ தேர்வர்கள் கவனத்திற்கு...’ - வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Important Announcement on Attention Group 2, Group 2A Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதியை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. 

அதில், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2ஏ தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே,  குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. 

இந்த நிலையில், குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விண்னப்பதாரர்கள் இன்று (20-06-24) தொடங்கி அடுத்த மாதம் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் செலுத்துவதற்கும் 19ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தத் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களை அறிய https://www/tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

போட்டித் தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன முதல்வர்!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
CM gave good news to the competitive candidates!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக விதி 110 இன் கீழ், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026 அம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை, இளைஞர்களின் மேன்மையை எப்போதும் மனதில் வைத்து திட்டங்களைத் தீட்டி வருவது திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை. இளைய சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிகக் கவனமாகச் செயல்பட்டு வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்ட அறிவிப்பைத்தான் இப்போது வெளியிட விரும்புகிறேன். 

CM gave good news to the competitive candidates!

வளமான அரசாக, அமைதியான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளம் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அதன்மூலம் நமது இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறோம். நமது மாணவச் செல்வங்களுக்குத் தரமான பள்ளிக் கல்வியையும் உயர்கல்வியையும் அளிக்கின்றோம். அத்துடன் அவர்களது வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. கல்வியின் மூலமாக ஒரு அறிவுசார் பொருளாதாரத்தை நாம் உருவாக்கி வருகிறோம்.

நம் இளைஞர்கள்தான் நம் பலம். அவர்கள்தான் நமது எதிர்கால வளத்திற்கு அடிப்படையானவர்கள். இதனை உணர்ந்த காரணத்தினால், தமிழ்நாடு அரசு இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே அரசுப் பணியினை எதிர்நோக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியினை பேரவையில் தெரிவித்துக் கொள்கின்றேன். 

CM gave good news to the competitive candidates!

வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.

அதாவது வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும். இவற்றை மொத்தமாக சேர்த்துப் பார்க்கையில், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளில் குளறுபடி; விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Ramadoss urges inquiry into irregularities in TNPSC  group 4 exams

டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 தேர்வுகளில் குளறுபடிகள் பற்றி விசாரணை தேவை எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன. 15 லட்சத்துக்கும் கூடுதலானவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய இத்தேர்வில் அதிகாரிகள் அலட்சியமாகவும், பொறுப்பின்றியும் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள நான்காம் தொகுதி பணியிடங்களை நிரப்பும் நோக்குடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 9 ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. மொத்தம் 6244 பேரை தேர்ந்தெடுப்பதற்கான இந்தப் போட்டித் தேர்வுக்காக தமிழ்நாடு முழுவதும் 7247 தேர்வு மையங்களும், அவற்றில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வுக் கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வில் பங்கேற்க 20 லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில் அவர்களில் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்றனர்.

தொகுதி 4 பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு தேர்வுக் கூட கண்காணிப்பாளர்களாக வந்தவர்களுக்கு இத்தேர்வு நடைமுறைகள் குறித்து எதுவும் தெரியவில்லை. அது தான் பெருமளவிலான குளறுபடிகளுக்கு காரணமாக அமைந்தது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்றும், அதற்கு வசதியாக ஒரு மணி நேரம் முன்பாக தேர்வர்கள் தேர்வுக்கூடங்களுக்கு  வரவேண்டும் என்றும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருந்து. சரியாக 9.00 மணிக்கு விடைத்தாள் வழங்கப் பட வேண்டும்; 9.15 மணிக்கு வினாத்தாள் தொகுப்பு வழங்கப்பட்டு, அதில் உள்ள பக்கங்கள் சரியாக உள்ளனவா? என்பதை ஆய்வு செய்த பிறகு, வினாத்தாள் எண்ணை விடைத்தாளில் குறிப்பிட வேண்டும். அதன் பிறகு சரியாக காலை 9.30 மணி முதல் தேர்வர்கள் விடைகளை எழுதத் தொடங்க வேண்டும்.

ஆனால், பல மையங்களில் தேர்வுக் கூட கண்காணிப்பாளர்கள் காலை 9.15 மணிக்கு பிறகு தான் தேர்வுக் கூடங்களுக்கு வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து மிகவும் தாமதமாகத்தான் விடைத்தாள்களையும், வினாத்தாள்களையும் வழங்கியுள்ளனர். சில கூடங்களில் காலை 10 மணிக்குப் பிறகு தான் வினாத் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பல்லாயிரக்கணக்கான தேர்வர்களால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை. அனுமதிக்கப்பட்டதை விட குறைவான நேரத்தில் விடை எழுத வேண்டியிருந்ததால்  பலர் சரியான விடையை தீர்மானிக்க முடியாமல், தவறான விடையை தேர்ந்தெடுத்ததும் நிகழ்ந்துள்ளது.

அதேபோல், விடை எழுதுவதற்கான நேரம் 12.30 மணிக்கு முடிவடைந்த பிறகு தான் 12.30 மணி முதல் 12.45 மணி வரை,  எத்தனை வினாக்களுக்கு ஏ வாய்ப்பை தேர்ந்தெடுத்துள்ளனர், எத்தனை வினாக்களுக்கு பி வாய்ப்பை தேர்ந்தெடுத்துள்ளனர் என்ற விவரத்தை பத்திவாரியாக விடைத்தாளின் முதல் பக்கத்தில் இரு இடங்களில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், தேர்வுக்கான நேரம் முடிவடைவதற்கு 15 நிமிடங்கள் முன்பாகவே இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், 12.30 மணிக்குள்ளாக இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, விடைத்தாளின் முதல்  பக்கத்தில் ஓர் இடத்தில் தேர்வர்களின் கைரேகையையும், இன்னொரு இடத்தில் கையெழுத்தையும் பதிவு செய்ய வேண்டும்; இரு இடங்களில் கண்காணிப்பாளர் கையெழுத்திட வேண்டும். இந்த பணிகளும் தேர்வு நேரம் முடிந்த பிறகு தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தேர்வு நேரத்தின் போதே இந்த பணிகளை செய்ய கண்காணிப்பாளர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் தேர்வர்களுக்கு கவனச் சிதறலும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் மற்றும் வினாத்தாள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், தேர்வுக்கு பிந்தைய பணிகளை முன்கூட்டியே செய்ய கட்டாயப்படுத்துதல் போன்றவற்றால் ஒவ்வொரு தேர்வருக்கும் 15 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை நேர இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கடும் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 4 தேர்வு  தான் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் தேர்வு ஆகும். இந்தத் தேர்வை நடத்த 50 ஆயிரத்திற்கும் கூடுதலான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்படாதது தான் நிகழ்ந்த குழப்பங்களுக்குக் காரணம் ஆகும். சில இடங்களில் தேர்வர்கள் விடையளிக்க முழுமையாக  3 மணி நேரம் வழங்கப்பட்ட நிலையில், பெரும்பான்மையான இடங்களில் தேர்வர்களுக்கு 25% வரை நேர இழப்பு ஏற்பட்டிக்ருகிறது. இது அனைவருக்கும் சமவாய்ப்பு; சமநீதி என்ற தத்துவத்திற்கு எதிரானது.

தமிழ்நாடு முழுவதும் 15 லட்சம் பேர் பங்கேற்கும் தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுச் செய்திருக்க வேண்டும். தேர்வு எழுதுவதற்கு முன் செய்யப்பட வேண்டிய பணிகள் என்னென்ன? எழுதிய பிறகு செய்யப்பட வேண்டிய பணிகள் என்னென்ன? என்பது குறித்த விவரங்கள் விடைத்தாளின் இரண்டாவது பக்கத்தில் தேர்வர்களுக்கான அறிவுரைகள் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ளன. அதைத் தேர்வர்கள் சுட்டிக்காட்டிய போதிலும் கூட, கண்காணிப்பாளர்கள் பொருட்படுத்தவில்லை. அந்த அளவுக்குத் தான் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த குளறுபடிகளுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதி தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து முழுமையான  விசாரணை நடத்த தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும். தேர்வர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் நோக்குடன் 9&ஆம் நாள் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து விட்டு, விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி மறு தேர்வு நடத்துவதற்கும் தேர்வாணையத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.