இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31-01-24) தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (01-02-24) மத்திய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ராமர் கோயில் திறப்பு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல், குளிர்கால கூட்டத் தொடரின்போது 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, அமலாக்கத்துறையினர் மீதான புகார்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த வேண்டும் என எதிர்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, கடந்த ஆண்டு மே மாதம் நடந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது. மேலும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதமர் மோடியே கட்டிடத்தை திறந்து வைத்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பழங்குடியினர் என்பதாலேயே பாஜக தலைமையிலான மத்திய அரசு அவருக்கு அழைப்பு கூட விடுக்காமல் இருந்தது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர். அது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முதல் முறையாக புதிய நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார். மேலும், பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை வந்த குடியரசுத் தலைவரை பிரதமர் மோடி வரவேற்றார். மேலும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் முன்பு நாடாளுமன்ற ஊழியர்கள் செங்கோலை ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அலுவல்கள் தொடங்கப்பட்ட நிலையில், இன்று தான் முதல்முறையாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகை புரிந்து உரையாற்றினார்.
அப்போது அவர், “ புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டை மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தியது. நமது அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது. அனைத்து கட்சியினரும் ஒத்த கருத்துடன் பயணிப்பார்கள் என நம்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டது பெருமைக்குரியது. வறுமையில் இருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நோக்கத்துடன் பயணித்து வருகிறோம்” என்று கூறினார்.