கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 26 வது கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்திருந்தபடி அக்டோபர் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீரை திறந்து வருகிறது.
இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89 வது கூட்டம் அக்டோபர் 30 ஆம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்திற்கான அறிவிப்பை காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா வெளியிட்டுள்ளார். காணொளி வாயிலாக கூடும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறையின் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியம், காவிரி தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர் பட்டாபிராம் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் கூறியது போல வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிநீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டதா எனவும், அடுத்தகட்டமாக தமிழகத்திற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.