மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.4,300 கோடிக்கும் மேல் விளம்பரத்திற்காக மட்டும் செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியைப் பிடித்ததில் இருந்து ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அந்தத் திட்டங்களை பிரபலப்படுத்த ஏராளமான விளம்பரங்கள் அரசு செலவில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த விளம்பரங்களுக்காக ஆன செலவு குறித்து மும்பையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர் அணில் கல்காலி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தார். இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்ட தகவல் குறித்து அணில் கல்காலி செய்தியாளர்களிடம் பேசினார்.
2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015 மார்ச் மாதம் வரை நாளேடுகளில் விளம்பரத்துக்காக ரூ.424.85 கோடி, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் வெளியிட்ட விளம்பரத்துக்காக ரூ.448.97 கோடி மற்றும் விளம்பரப் பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவற்றின் மூலம் ஏற்படுத்திய விளம்பரத்துக்காக என மொத்தமாக ரூ.953.54 கோடி ரூபாயை மத்திய அரசு ஓராண்டில் செலவிட்டுள்ளது.
2015 - 2016 காலகட்டத்தில் நாளேடுகளில் விளம்பரம் செய்ய ரூ.510.69 கோடியும், மின்னணு ஊடகங்களில் ரூ.541.99 கோடியும், விளம்பரப் பலகை உள்ளிட்ட விளம்பரப் பலகைகளுக்காக ரூ.118.93 என முந்தைய ஆண்டைவிட அதிகமான தொகையாக ரூ.1,171 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதேபோல், 2016 - 2017 காலகட்டத்தில் ரூ.1,263 கோடி மத்திய அரசு செலவு செய்துள்ளது.
2017ஆம் ஆண்டில் அதிகளவு நிதி விளம்பரங்களுக்காக ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில், மத்திய அரசு செலவினங்களைக் குறைத்தது. அந்தக் கண்டனங்களும், விமர்சனங்கள் எழுந்ததால் ஆண்டொன்றுக்கு சராசரியாக ரூ.307 கோடி வரை செலவு குறைந்துள்ளது. இருப்பினும் இது ஒப்பீட்டளவில் அதிகமே என தெரிவித்துள்ளார்.