"இவுங்க பாக்குற வேலைக்கு இந்த சம்பளம் போதாதாக்கும்...''
""அரசு அலுவலகத்துல யாராச்சும் லஞ்சம் வாங்காம காரியம் பாக்குறாங்களா''
அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் எப்போது நடந்தாலும் சரி... இப்படி ஒரு பேச்சு பொதுமக்களிடம் வெளிப்படுவதும், அதனை அரசாங்கம் மற்றும் அரசு ஆதரவு ஊடகங்கள் மிகைப்படுத்துவதும் வழக்கமாகிவிட்டது.
அதுவும்போக, யாராவது ஒருத்தரைக் கொண்டு போராட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்து நீதிமன்றத்தின் மூலமாக தடையுத்தரவு பெறுவதும் சமீபகாலமாக அரசாங்கத்தின் புதிய பாணியாக மாறியிருக்கிறது.
அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அவர்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போல, நள்ளிரவில் கைது செய்து, பலர் உயிரிழக்கக் காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். அதன் பலனை அடுத்துவந்த நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலில் அனுபவித்தார். அவர்தான், 2011-2016 ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்களின் பென்சன் திட்டத்தை ரத்துசெய்தார். அது ஏற்படுத்திய எதிர்ப்பு உணர்வு காரணமாக, 2016 தேர்தலில் வெற்றிபெற்றால் மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்காலமே அரசாங்கத்தின் பென்ஷனைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தது. அத்தகைய வாழ்வாதாரத்தை மீட்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் ஜாக்டோ ஜியோ அமைப்பு காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியது. 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், 4.5 லட்சம் ஆசிரியர்களைக் கொண்ட இந்த அமைப் பின் முதல்நாள் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். மதுரையில் போராடிய அரசு ஊழியர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினார்கள். இதுகுறித்து, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அன்பரசு, “""கைது நடவடிக்கைக்கு அஞ்சாமல் கோரிக்கை நிறைவேறும்வரை போராடுவோம்''’என்றார் நம்மிடம்.
ஏற்கெனவே, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 15 ஆம் தேதி போராட்டத்துக்கு தடை விதித்தது. அதைத்தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ அறிவித்தது.
அந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது. விசாரணையில் அரசு சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று நீதிமன்றமே கருத்துத் தெரிவித்துள்ளது. ஜனவரி 28 ஆம் தேதி அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்ற நிலையில் இப்போது ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுத்தேர்வு -நீட் தேர்வு தயாரிப்பு நேரத்தில் பாடம் நடத்தாமல் போராட்டம் நடத்துவதற்கு தடைவிதிக்கும்படி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல் மூலமாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வு 25-ஆம் தேதி அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அரசு ஊழியர்களை போராடும் நிலைக்கு தமிழக அரசு தள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை அறிந்த பிறகு இந்த வழக்கை விசாரிக்க வசதியாக 29 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்திருக்கிறது.
இந்நிலையில், ஜாக்டோ ஜியோவின் போராட்டம் குறித்த விமர்சனங்களை முன்வைத்து அவர்களின் கோரிக்கைகளின் நியாயத்தை விளக்கும்படி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் ஞானத்தம்பியிடம் பேசினோம்.…
""பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தொடக்கப்பள்ளிகளின் தனித் தன்மையை ஒழித்து, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் அவற்றை இணைக்கக் கூடாது. அரசின் இந்த முடிவால் 3500 சத்துணவு மையங்கள் மூடப்படுவதை தடுக்க வேண்டும். அரசு ஊழியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிடங்களை குறைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளுக்கு நியமிக்கும் (பணி இறக்க நடவடிக்கை) முடிவை கைவிட வேண்டும். அந்த வகுப்புகளுக்கு மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து வேலைவாய்ப்பு வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகள் அனைத்தும் எந்தக் காலத்திலும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கானவை ஆகும். 9 கோரிக்கை களில் 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும்கூட அரசின் கடமையுடன் தொடர்புடையதுதான்.
ஆனால், எங்கள் கோரிக்கைகள் குறித்து இரண்டு ஆண்டுகளாக சாக்குப்போக்கு சொல்லியே காலத்தைக் கடத்துகிறது அரசு. நீதிமன்றம் அறிக்கை கேட்டால் சம்பளத்திருத்தம் தொடர்பாக குளறுபடியான அறிக்கையை வேண்டுமென்றே தாக்கல் செய்கிறது. அமைச்சருடன் பேச்சு நடத்தினால்... எங்கள் கோரிக்கை எதையுமே ஏற்காமல் இழுத்தடிப்பது, எங்கள் கோரிக்கை குறித்து கேட்கும் மனநிலை முதல்வருக்கே இல்லாதது என்று எங்களை தொடர்ந்து வஞ்சிக்கும் போக்கே நீடித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? மூன்றரை லட்சம் அரசுப்பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றை நிரப்பி புதிய வேலைவாய்ப்புகளை வழங்க அரசு முயற்சியே செய்யவில்லை. வேறு வழியே இல்லாமல்தான் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம்''’’என்றார்.
ஜனவரி 24 அன்று கூடிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், தங்கள் போராட்டம் தொடரும் என்றும், 9 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் உறுதிபடத் தெரிவித்தனர்.
-சோழன், அருண்பாண்டியன்
படங்கள் : ஸ்டாலின்