உன்னை ஏன் இழந்தோம்?
- பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்!
அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டி வெ.பொன்ராஜ், தமிழ் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளான இன்று, தனது வாழ்த்தையும் ஆதங்கத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தி இருக்கிறார்.
உன்னால்தான் தமிழனுக்கு அங்கீகாரம் கிடைத்தது!
தமிழர் தலைவர் திரு வே.பிரபாகரன் நீ பிறந்த நன்நாள் இன்று! வீரத்திற்கும், ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும், தலைமைப்பண்பிற்கும், உலகிற்கே எடுத்துக்காட்டாய் திகழ்ந்தாய்! தமிழனை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தாய்! தமிழர்கள் அனைவரையும் விடுதலைப்புலிகளாகப் பார்க்கச் செய்தாய்! பயத்தோடு தமிழனுக்கு உலகம் அங்கீகாரம் கிடைத்தது இந்த நூற்றாண்டில்தான்! அதுவும் உன்னால்தான்!

பாலசிங்கம்
கட்டுக்கோப்பான ஒழுக்கமான இராணுவத்தை ஈழத்தமிழ் நாட்டை நிர்மாணிக்க உருவாக்கினாய்! மனிதன் என்றால் தோல்விகளும், வெற்றிகளும் சகஜம்தான்! ஆனால், இரண்டுக்கும் கொடுக்கும் விலை மிகப்பெரியது. இதை உன் காலத்தில், உன் போராட்டத்தில், 1980-90 களில் தமிழ்நாட்டில் உனக்கு தோள் கொடுத்துப் போராடிய மாணவர்களாகிய எங்களுக்கு மட்டுமல்ல, இன்றைக்கு உன்னைப் பார்த்து, உன்னைப் படித்து வளரும் இளம் தலைமுறையினருக்கும் கற்றுக்கொடுத்தவன் நீ.
விவேகத்தில் சறுக்கல்! வீழ்ந்தோம்!
வீரத்தில், செயலில், ஆற்றலில் உனக்கு நிகர் இனிமேல் பிறந்தால்தான் உண்டு. நீ வாய்சொல்லில் வீரனல்ல, செயலில், வீரத்தில், தீரத்தில் மிகச்சிறந்த தீரன் நீ. எம்.ஜி.ஆரும், இந்திராகாந்தியும் மறைந்தார்கள் உன் அரசியல் பலம் உன்னை விட்டுப்போனது. பாலசிங்கம் செயல் இழந்தார், அரசியல் விவேகம், அரசியல் சாணக்கியம் உன்னிடம் இருந்து விடைபெற்றது. விவேகத்தில் ஏற்பட்ட பிழை ஒரு வரலாற்று போராட்டத்தையே காவு கொண்டுவிட்டது. இராணுவத்தையும், உலக நாட்டு அரசியலையும் விவேகத்தோடு அணுகத் தவறியதின் விளைவு - நாட்டை உருவாக்குவதற்கும், வழி நடத்துவதற்கும், இராணுவத்தை வழி நடத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள தவறியதின் விளைவு இது.

இரத்தத்திற்கு இரத்தம், கத்திக்கு கத்தி, இனவாதத்திற்கு இனவாதம், மொழி வாதத்திற்கு மொழி வாதம், அடிக்கு அடி என்பதைத் தாண்டி உலகம் வெகு தூரம் வந்து விட்டது என்பதை மகாத்மா காந்தியையும் - நேதாஜி சுபாஷ் சந்திர போஸையும் படித்திருந்தால், உன் வியூகம் சாணாக்கியத்தோடு மாறியிருந்தால், உன் இலக்கான தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். ஆனால், விவேகத்தில் வந்த சுறுக்கல் பல்வேறு துன்பியல் சம்பவங்களை அரங்கேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாய். நெப்போலியனுக்கே வந்த சறுக்கல், உனக்கு வராதா என்ன? அந்தச் சறுக்கல் ஈழத்தமிழ் இன அழிப்பில் முடிந்தது. ஆண்மையோடு போரிட்ட பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகளை பல்வேறு நாடுகள் இணைந்து போரிட்டு அழித்தார்கள் என்ற வரலாற்று சான்றோடு ஒரு மாபெரும் தலைவனையும் இழந்து இன்றைக்கு தவிக்கிறது ஈழத்தமிழினம்..
தவறுகளில் இருந்து பாடம் கற்று மீண்டெழுவோம்!
உனது வாழ்க்கை, உனது தியாகம், உனது திறம், உனது கொள்கை, உனது வீரத்தை வரும் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் படித்து, உணர்ந்து, உன் தவறுகளில் இருந்து பாடம் கற்று, மீண்டெழுந்து ஒரு இளம் சமுதாயம் ஈழ மண்ணில் தோன்றும். அந்த இளைய தமிழ் பிள்ளைகள்தான் உலக நாடுகளின் உறுதுணையோடு தமிழ் ஈழம் படைக்கும். அப்போது உனது இலட்சியத்திற்கு ஜனநாயக வழிமுறையில் உறுதுணையாக நிற்கும் இந்தியா உருவாகியிருக்கும்.

பரம்பொருள் ஆன பராபரன்.. இன்னொன்று ஈழத்தமிழர்க்கு –
அரும்பொருள் ஆன பிரபாகரன்!
-இவ்வாறு கூறியிருக்கிறார் வெ.பொன்ராஜ்.
-சி.என்.இராமகிருஷ்ணன்