தமிழக உளவுத்துறை தலைவராக இருக்கும் ஐ.ஜி.சத்தியமூர்த்தி இம்மாதம் 31-ந் தேதியோடு ஓய்வு பெறுகிறார். சட்டமன்ற தேர்தல் வரை அவர் பணி செய்யும் வகையில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க தயாராக இருந்தார் முதல்வர் எடப்பாடி. ஆனால், அதில் ஆர்வம் காட்டாத சத்தியமூர்த்தி, ஓய்வு பெற விரும்புவதாக எடப்பாடியிடம் தெரிவித்து விட்டார். ஆனாலும், சத்தியமூர்த்தியை விட்டுவிட மனதில்லாமல் இருக்கும் எடப்பாடி, முக்கியத்துவமுள்ள அரசு பதவி ஒன்றில் அவரை நியமிக்க நினைக்கிறாராம்.
இந்த நிலையில், உளவுத்துறைக்கு புதிய தலைவர் யார்? என்கிற விவாதம் தமிழக காவல்துறையில் சீரியஷாக நடந்துகொண்டிருக்கிறது. இது குறித்து விசாரித்தபோது,’’ உளவுத்துறையில் ஏ.டி.ஜி.பி. பதவி நீண்ட காலமாகவே நிரப்பப்படாமல் இருக்கிறது. அதனால், உளவுத்துறையின் தலைவராக, ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியை நியமிக்கலாமா ? அல்லது இப்போது போலவே ஐ.ஜி. ரேங்கில் இருக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்கலாமா ? என்கிற ஆலோசனையை உள்துறை செயலாளர் பிரபாகரரிடமும், டி.ஜி.பி. திரிபாதியிடமும் ஆலோசித்துள்ளார் முதல்வர் எடப்பாடி.
சென்னை கமிஷ்னரான ஏ.டி.ஜி.பி. விஸ்வநாதன் விரும்பினால் அவரை உளவுத்துறைக்கு கொண்டு வர எடப்பாடிக்கு ஒரு யோசனை சொல்லப்பட்டிருக்கிறது. அதே சமயம், விஸ்வநாதன் விரும்பாத நிலையில், ஐ.ஜி. ரேங்கில் உள்ள அதிகாரியை நியமிக்கவே அதிக வாய்ப்பு. அந்த வகையில், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட ஐ.ஜி.க்கள் சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன ’’ என்கிறது ஐ.பி.எஸ். வட்டாரம்.
இதற்கிடையே ஏ.டி.ஜி.பி.க்களாக இருக்கும் கந்தசாமி, மாகாளி, ஷகில் அக்தர், ராஜேஸ்தாஸ் ஆகியோர் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெறவிருக்கிறார்கள். இந்த பதவி உயர்வின் போது ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பலரும் மாற்றப்படுவார்கள். அதற்கான பட்டியல் தயாராகி வருகிறது.