தமிழ்நாட்டின் அண்ணன்!
அண்ணா - நினைவு தினம் இன்று

"இந்தியா என்பது ஒரு கண்டம். இதை ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு நாடாகப் பிரிக்கத்தான் வேண்டும். ஐரோப்பா கூட அப்படிதான் 32 நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரே குடையின்கீழ் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இங்குள்ள ஒவ்வொரு இனமும் இன்னொரு இனத்தை அழிக்காமல் அமைதி காப்பதற்கு பிரிட்டிஷாரின் துப்பாக்கிகள் தான் காரணம். அது அமைதியாக இருக்கிறது. அவர்கள் இங்கிருந்து சென்றுவிட்டால் இனங்களுக்கிடையே யுத்தமே கூட வரும்" - இது சுதந்திரத்துக்கு முன் திருச்சியில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் ஒலித்த அண்ணாவின் குரல். பின்னர், அரசியல் சூழலுக்கும் நாட்டின் நன்மைக்குமேற்ப தன் 'திராவிட நாடு' நிலைப்பாடுகளை சற்று தளர்த்திக் கொண்டாலும் 'தமிழ்நாடு' என்பதன் மீதான உணர்வும் மாநில சுயாட்சி என்ற கொள்கையும் அவருள் ஊறியது.
ஏற்கனவே மக்கள் மத்தியில் 'தமிழ்நாடு' என்ற வார்த்தை புழக்கத்தில் இருந்தாலும் அதிகாரபூர்வமாக அது 'மெட்ராஸ் பிரசிடென்சி'யாகத் தான் இருந்தது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது (1956) 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அப்போது அது நிறைவேற்றப்படவில்லை. அதன்பின் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, 1967 ஜூலை 18 அன்று அண்ணா 'மதராஸ் மாகாணம்', தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார். அந்தத் தீர்மானம் அப்பொழுதே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் அண்ணா "தமிழ்நாடு" என்று கூறியவுடன் சட்டமன்றத்திலிருந்த அத்தனை உறுப்பினர்களும் "வாழ்க" என்று முழக்கமிட்டனர். அதன்பின் 1969 ஜனவரியில் அதிகாரபூர்வமாக தமிழ்நாடு ஆனது.

"ஒரு மனிதர் இரண்டு நாய்களை வளர்த்தார், ஒன்று சிறியது, மற்றொன்று பெரியது. அந்த நாய்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்து போகவேண்டும். ஆனால், அதற்காக வீட்டின் முன் உள்ள இரும்புக்கதவை எப்போதும் திறந்துவைக்க முடியாது. அதனால் அந்த இரும்புக்கதவில் இரண்டு சிறிய கதவுகளை உருவாக்கினார். பெரிய நாய்க்கு பெரிய கதவு, சிறிய நாய்க்கு சிறிய கதவு. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தார் சிரித்தனர், அவரைப் பைத்தியக்காரன் என்றனர். ஏன் தெரியுமா? பெரிய நாய்க்கு பெரிய கதவை உண்டாக்கினால், அதிலேயே சிறிய நாயும் சென்று வரலாம் தானே? இப்படித்தான் இருக்கிறது மத்திய அரசு சொல்லும் இந்தி கல்வியும். இந்தியா முழுவதுமுள்ள பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் ஆங்கிலம் சொல்லித்தரப்படும் என்கிறார்கள். அப்படியானால், ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு உலகம் முழுவதும் தொடர்பு கொள்ளலாமே? பின் எதற்கு இந்தியாவில் தொடர்பு கொள்ள இந்தி, வெளிநாட்டில் தொடர்பு கொள்ள ஆங்கிலம் என்று இரண்டு கதவுகள்?" - இது இந்தி திணிப்புக்கு எதிராக அண்ணா சொன்ன பிரபலமான கதை.
அண்ணா சிறுவயதிலிருந்தே தமிழின் மீது ஆர்வமும், தமிழில் புலமையும் கொண்டிருந்தார். அவர் தம்பிக்கு எழுதிய கடிதங்கள் முதல் அவரின் பேச்சு, உரைநடை, கவிதை என அனைத்தும் அனைத்து தரப்பினரையும் அடையும் விதமாக, கவரும் விதமாகவே இருந்தது. அவர் 60 சதவீதம் புலவர் தமிழ், 40 சதவீதம் பாமரர் தமிழ் என்ற ஒரு கலவையை தன் படைப்புகளில் அளித்தார். அவரது பேச்சு தான் இன்றுவரை தமிழக அரசியல் பேச்சாளர்கள் பேசும் பாணிக்கு அடிப்படை. தன்னைச் சுற்றியிருக்கும் அனைவரையும் அடைமொழியில் அழைப்பதுதான் அண்ணாவின் பழக்கம். அவரது ஆட்சிக்காலம் மிகக் குறைவு (இரண்டு ஆண்டுகள்) என்றாலும் அவரது சாதனைகளும், அவரது ஆட்சியும் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அண்ணன் என்றால் அது அண்ணாதான் என்பதை மறுப்பவர்கள் இன்றும் இல்லை. அத்தகைய மனிதர் அண்ணா. அவரது மரணத்துக்குக் கூடிய கூட்டம் கின்னஸில் இடம் பெற்றது. அவரின் நினைவு தினம் இன்று.
கமல்குமார்