தமிழ் மீது பாசம் கொண்ட ஜப்பான் ஜோடி
பொதுவாக தமிழர்களையும், தமிழ் பாரம்பரியத்தையும் மிகவும் நேசிக்கும் நாடுகளில் முதலிடம் பெறுவது ஜப்பான்தான். குறிப்பாக ரஜினி படங்களுக்கு ஜப்பானியர்களிடையே வரவேற்பு அமோகமாகவே இருக்கும். தமிழகத்தில் ரீலிஸ் ஆகும் ரஜினி படங்களுக்கு ஜப்பானில் விழா கொண்டாடினர். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஜப்பானிய ஜோடி ஒன்று தமிழர் பாரம்பரியத்துடனும், தமிழர்களின் கலாசாரத்தின் மீதும் காதல் கொண்டு தங்களது திருமணத்தை இந்து முறைப்படி தமிழர் மரபுப்படி மதுரைக்கு தங்கள் உற்றார் உறவினருடன் வருகைதந்து மணமாலை மாற்றிக் கொண்டுள்ளனர். இந்தத் திருமண நிகழ்வுகள் குறித்து சுவாரஸ்யமிக்க தகவல்கள்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசிப்பவர் கெய்ஜி ஓபாதா. இவருடைய மனைவி நஓமி ஓபாதா. இவர்களுடைய மகள் சிஹாரு (வயது-26). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் மொழியியல் துறையில் மேற்படிப்பு படித்த போது ஜப்பான் மொழி-தமிழ் மொழி இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து ஆராய்ச்சி செய்தார். இதற்காக சிஹாரு கடந்த 2014-ம் ஆண்டு சென்னை, மதுரை, சிதம்பரம், புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு வந்து தமிழ்மொழியை அறிந்து கொண்டார்.
டோக்கியோவில் தனது வீட்டின் அருகே உள்ள மதுரை வில்லாபுரம் வெங்கடேஷ் மனைவி வினோதினி தன் தோழியிடம் தமிழை தெரிந்து, தமிழ் மொழி மீதான ஆர்வத்தால் சிஹாரு, தமிழ் மொழியை பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டு, தமிழர்களின் பண்பாடு, ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையையும், அதன் வரலாற்றையும் தெரிந்தும் கொண்டார்.
குறிப்பாக அவருக்கு தமிழர்களின் திருமண முறைகள், உடைகள் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் மிகவும் பிடித்திருந்தது. தானும் தமிழர் கலாசாரப்படி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். கடந்த ஏப்ரலில் சிஹாருவும், காதலர் பேராசிரியர் யூடோவிற்கும் ஜப்பானில் பதிவுத் திருமணம்செய்து கொண்டனர். சிஹாருவுக்கு தமிழர் முறையிலான திருமணம் மீதான ஆசையை, தனது கணவர் யூடோவிடம் தெரிவித்தார்.
அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்து தமிழர் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், இவர்களது திருமணம் தோழி வினோதினி கணவர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் மதுரை இரயில் நிலையம் மேற்குவாயில் எதிரே உள்ள வெஸ்டர்ன்பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது.
மணமகள் பட்டுச்சேலை அணிந்து அழைத்து வரப்பட்டார். அவருக்கு ஆரத்தி எடுத்து, வேட்டி-சட்டையுடன் மணமகன் யூடோ மேள தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பின்னர் தமிழர் முறைப்படி சம்பிரதாயங்கள் நடந்தன. மாப்பிள்ளை, பொண்ணும் ஒருவருக்கு ஒருவர் மாலைமாற்றி, கெட்டி மேளம் முழங்க சிஹாருவுக்கு, யூடோ தாலி கட்டினார். இத்திருமணத்தில் சிஹாருவின் தந்தை கெய்ஜி ஓபாதா, தாய் நஓமிஓபாதா ஆகியோர் கலந்து கொண்டு மதுரை மக்களை ஆச்சரியப்படவைத்தனர்.
இத்திருமணத்தை மதுரையில் ஏற்பாடு செய்த விநோதினியின் கணவர் வெங்கடேஸ்சை நாம் சந்தித்தோம். ஜப்பான் நாட்டின் டோக்கியோவைச் சேர்ந்த இவர்கள் எனது வீட்டின் அருகே இருக்கிறார்கள். இயல்பாக பழகக்கூடியவர்கள் நான் தமிழர் என்று தெரிந்தவுடன் எனது குடும்பத்துடன் நெருங்கி பழகினர். தமிழ் மீது ஆர்வம் கொண்டதால் எங்களை அவர்களுக்கு பிடித்திருந்தது. தனக்கு ஏற்கனவே ஜப்பானிய முறைப்படி மோதிரம் மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டோம். தமிழர்களின் பண்பாடுகள் பிடித்ததால் மதுரையில் திருமணம் செய்ய அவர்களும் சம்மதித்தனர்.
நம்மூர் தமிழர்களை போல் திருமணசடங்கு செய்து கல்யாணம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அதனால் தமிழர்களின் மரபுபடி தமிழில் பத்திரிக்கை அடித்து பந்தகால் ஊன்றி, ஐயர் மந்திரம் சொல்ல தாலிகட்டி பெரியோர்கள் முன்னிலையில் நடத்தி வைத்தது மிகழ்ச்சியாக இருக்கிறது.
நம் தமிழையும், தமிழர்களை போற்றும் வகையில் இத்திருமணத்தில் பங்கேற்ற மணமக்கள் மற்றும் உறவினர்கள் எல்லோரும் வேட்டி, சேலைகள்கட்டி நம்ம ஊர் மதுரையின் பாரம்பரியத்திற்க்கு பெருமை சேர்த்துள்ளனர். வெளிநாட்டவர்கள் எல்லாம் நமது தமிழ்மரபை பின்பற்ற பாவாடை, தாவணி, சேலை, வேட்டி என கட்ட துவங்கிய நிலையில், நம்ஊர் யுவதிகளோ ஜீன்ஸ், டாப்ஸ், லெக்கீன்ஸ் ,டவுசரு என மேற்கத்திய கலாச்சாரத்தை மூழ்கி கிடக்கின்றோம் என நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது என்ற இத்திருமணத்தில் பங்கேற்ற பெரியவர்கள் பேசிக் கொண்டியிருந்ததை நம்மால் கேட்க முடிந்தது.
-ஷாகுல்