Skip to main content

அறிவியல், செயற்கை நுண்ணறிவு, வளர்ச்சியா?

Published on 11/11/2017 | Edited on 11/11/2017
அறிவியல், செயற்கை நுண்ணறிவு, வளர்ச்சியா?

உலக அமைதிக்கான அறிவியல் தினம்'17    





சவுதி அரேபியாவில் ஒரு கருத்தரங்கு மேடையில் அந்தப் பெண் பேசிக்கொண்டிருந்தாள். நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு மிக அழகாக பதில் சொன்னாள், ஒரு இடத்தில் தொகுப்பாளரைக் கிண்டலும் செய்தாள். அழகான அவளது முகத்திற்கு சற்று மேலே பார்த்தால், வயர்கள் சூழ்ந்த தலை தெரிகிறது, அப்பொழுதுதான் அது ரோபோ என்று நமக்கு உரைக்கிறது. தன் பெண்களுக்கே பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் சவுதி, ஒரு ரோபோட் பெண்ணிற்கு உலகின் முதல் நாடாக குடியுரிமை வழங்கும் அளவுக்கு மாறியுள்ளது. விஞ்ஞானம், உணர்வுள்ள  தன் ரோபோட்டையும் உருவாக்கிவிட்டது. நேற்று (10 நவமபர்) அமைதி, வளர்ச்சிக்கான உலக விஞ்ஞான நாளாகக் ஐநாவால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. ஐநாவின் இந்த வருடத்தின் 'தீம்' உலக புரிந்துணர்வுக்கான விஞ்ஞானம் (science for global understanding).  எந்திரன் படத்தில் ரோபோ ஐஸ்வர்யாராயின் மீது காதல் கொண்டு அவளைக்  கைப்பற்ற பல நாசவேலைகள் செய்யும்.டெர்மினேட்டர் படத்தில் ரோபோக்கள் மக்களை ஆட்டிப்படைக்க நினைக்கும், அதில் ஒன்று மக்களை காப்பாற்ற போராடும். இது அனைத்துமே அறிவியல் தொழில்நுட்பம் மேம்பட்டு, அதன் பயன்களை காட்டி, பின்னர் அதனால் மக்களின் அமைதி மற்றும் வாழ்வாதாரம்  அழிக்கப்படுவதாக  சித்தரிப்பார்கள்.






தனியார் விஞ்ஞான நிறுவனங்கள் பெரும்பாலும்  அறிவியல் வளர்வதால் மனிதனின் வாழ்வாதாரமும் வளரும் என்கின்றனர். அதனால் ஏற்படும் சில தவறான விளைவுகள் பற்றி மக்களுக்கு தெரியவைக்க யோசிக்கின்ற. ரோபோக்கள் மட்டும்தான் அறிவியலா என்றால் இல்லை, அறிவியலை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்ட நிறைய நல்ல கருவிகள் உண்டு, அதனால் ஏற்படும்  பாதிப்புகளும் உண்டு. தற்போதைய சூழலில் உலக நாடுகளில் யார், எவர் அணு ஆயுத பரிசோதனை செய்து பக்கத்து நாடு, தன் எதிரி நாட்டை பயமுடுத்துகிறார்களோ அவர்களே வலிமை மிக்கவர்களாக கருதப்படுகின்றனர். அதற்கு அமெரிக்காவும், வட கொரியாவும்  சிறந்த எடுத்துக்காட்டு. அதே போல  அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்ட  தோட்டாக்களும், துப்பாக்கிகளும் எத்தனை பேரை  பலி கொடுத்துள்ளது. உலகின் நாட்டாமையான   அமெரிக்காவிலேயே தீவிரவாதிகள் இந்த வருடம் 'நியூயார்க்' நகரத்தில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தி அதில் அப்பாவி மக்கள் 150 பேரை கொன்றுள்ளனர். அறிவியல் கண்டு பிடிப்புகள் மக்களுக்கு பயன்படுகிறதோ இல்லையோ, மக்களை அழிக்கவேண்டும் என்று நினைக்கின்ற கெட்டவர்கள் கையில்தான் அதிகம் கிடைக்கிறது. ஃபிரான்ஸ், இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளிலும்  துப்பாக்கிசூடு, வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டு மக்களை பாதித்துள்ளது.






மக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கருவிகளே பயங்கரமான பாதிப்பை ஏற்படுத்துகையில், ரோபோக்களை ஆயுதம் ஏந்த விடலாம் என்று பலர் யோசித்தனர். நல்லவேளை கில்லர் ரோபோக்களை உருவாக்க வேண்டாம்  என 'இன்டர்நேஷனல் ஜாயின்ட் கான்பிரன்ஸ் ஆன் ஆர்டிபிஸியல் இண்டெலிஜென்ஸ் (IJCAI)'  (செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு)  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்   நிறுவனத்தில் சில  வேலைகள் எல்லாம்  ரோபோக்களை வைத்துதான் செய்கிறார்களாம். ஒரு நாள் அந்த ரோபோக்கள் தங்களுக்குள்ளே தொடர்புக்கொள்ள ஆரம்பித்துவிட்டனவாம். அதற்கு என்று மொழி சேர்க்கப்படவில்லை அதனால் ரோபோக்கள் தங்களுக்கென்று மொழியை ஏற்படுத்தி பேசியிருக்கிறது. அதிர்ந்து போன நிறுவனம் அந்த ரோபோக்களை அனைத்துள்ளது. இதேபோன்று தான் சோஃபியா எனும் பெண் ரோபோ உலகை கலக்கி கொண்டு இருக்கிறது.( ரோபோக்களில் பாலினம் கிடையாது, பெண் என்று உருவாக்கப்பட்டது ). 

அறிவியலால் மக்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒவ்வொரு கண்டுபிடிப்புகளிலும் நல்லதும் இருக்கிறது, கேட்டதும் இருக்கிறது.ஆனால் சில அறிவியல் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மனிதனின் வாழ்வாதாரத்தையே அழிக்கயிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன. அணு ஆயுத சோதனைகளால் நாடுகளிடையே பதற்றம் உண்டாகிறது. ரோபோக்கள் ராணுவங்களுக்கு பயன்படுத்தப்பட்டால், என்ன ஆகுமோ என்று தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் பயப்படவேண்டியதில்லை, அறிவியல் வளர்ச்சி தவிர்க்க முடியாதது. அதே நேரம், அதனால் மனித வாழ்வின்  அமைதி கெடுமென்பது ஏற்க முடியாதது.                            

சந்தோஷ் குமார் 

சார்ந்த செய்திகள்

 
News Hub