அரசியல் ரஜினிக்கு நல்லதா?
உங்களுக்கு பிடித்த தலைவர் யார் என்று ரொம்ப காலத்துக்கு முன்னாடியே ரஜினிகிட்ட கேட்டாங்க. அதுக்கு அவரு சொன்ன பதில் என்ன தெரியுமா?
லீ குவான் இயூ. யார் இவர்? இவர் சிங்கப்பூரின் அதிபராக இருந்தவர். குட்டியூண்டு தீவான சிங்கப்பூரை உலகின் சொர்க்கபுரியாக மாற்றியவர் லீ. சிங்கப்பூரை உருவாக்கியவரே இவர்தான். இவருடைய கண்டிப்பும், அர்ப்பணிப்பும்தான் சிங்கப்பூரை செல்வம் கொழிக்கும் சீமையாக மாற்றியது.
சரி லீ குவான் இயூவை விடுவோம். இப்போ எதற்கு அவருடைய பெருமையெல்லாம். ரஜினிக்கு பிடித்த தலைவர் லீ என்றால், ரஜினி சிங்கப்பூர் மாதிரி இந்தியாவும் சுத்தமாக, செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்றுதானே அர்த்தம்?
1996 சமயத்தில் ரஜினிக்கு லீயை பிடித்திருந்தது. அப்போவே அவருக்கும் அரசியலில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு உருவாகி இருந்தது. அந்தச் சமயத்தில் ரஜினிக்கு ரசிகர்கள் ஏராளமாக இருந்தார்கள். பெரும்பகுதி மக்களக்கு பிடித்தவராகவும் ரஜினி இருந்தார்.
ஆனால், அந்தச் சமயத்தில்கூட நேரடி அரசியலுக்கு வர ரஜினி விரும்பவில்லை. ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்கும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என மீடியாக்கள் கேள்வி எழுப்புவதும், அதற்கு மழுப்பலான பதிலை ரஜினி சொல்வதுமாக அந்தத் தேர்தலே கடந்து போய்விடும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஜெயலலிதா இறந்துவிட்டார். கலைஞர் முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வெடுத்திருக்கிறார். கலைஞரின் கரகரத்த குரலும், அன்றைய அரசியல் திசையை தீர்மானிக்கும் அவருடைய அறிக்கையும் இப்போது இல்லை. கலைஞரின் அறிக்கைக்கும், பேட்டிக்கும் பதிலளித்து ஜெயலலிதா வெளியிடும் அறிக்கைகளும் இல்லை.
இப்போது, அரசியலே போரடிக்கிறது. அதை போக்கும் வண்ணம் அரசியல் காமெடிகள் அதிகரித்துள்ளன. ஜெயலலிதாவுக்கு பிந்தைய அதிமுக இரண்டு, மூன்று, நான்கு கூறுகளாக பிரிந்து கிடந்தன. பிறகு மூன்றாகின. இப்போது கிட்டத்தட்ட இரண்டு அணிகளாக கிடக்கின்றன.
தமிழக அரசாங்கம் தடுமாறிக் கிடக்கிறது. அது எந்தத் திசையில் பயணிக்கிறது என்பதே தெரியவில்லை. தமிழகம் இதுவரை பொத்திப் பாதுகாத்த உரிமைகள் அனைத்தையும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பறிகொடுத்துவிட்டது.
திமுக இப்போது அதிமுகவின் இரண்டு பிரிவுகளையும் எதிர்த்து போராட வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் அந்த இரண்டு பிரிவுகளுமே பணத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து அரசியல் செய்ய முடிவெடுத்துள்ளன. ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் திமுக பணம் செலவழிக்காமல் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்ததுதான் மிச்சம்.
இந்த சூழ்நிலையில்தான், ரஜினிகாந்த் தானும் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்திருக்கிறார். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும், ஆன்மீக அரசியலை நடத்த விரும்புவதாகவும் ரஜினி கூறியிருக்கிறார்.
அவருடைய இந்த முடிவு பல தரப்பிலும் பல்வேறு கருத்துக்களை எதிரொலிக்கச் செய்துள்ளது. ரஜினியின் இந்த முடிவு காலங்கடந்தது என்று சிலரும், இவருடைய முடிவால் அவருக்கே இழப்பு என்று சிலரும், ஆன்மீக அரசியல் என்பது பாஜகவின் நிலைப்பாடுதானே என்று சிலரும், இனம், மொழி, பக்கத்து மாநிலங்களுடன் உறவு, காவிரி நீர் பிரச்சனை ஆகியவற்றில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பதை கூறட்டும் என்று சிலருமாக கருத்துக்கள் வெளியிடுகிறார்கள்.
ரஜினி அரசியலுக்கு வருவதை சீமான் கடுமையாக எதிர்க்கிறார். ஆனால், 2009 ஆம் ஆண்டு தமிழ் ஈழப் பிரச்சனையைப் பேசி பின்னர் அரசியலுக்கு வந்த சீமான் அரசியலில் என்ன சாதித்துவிட்டார் என்ற கேள்விக்கு புலம்பெயர் தமிழரின் நிதியுதவியையும், இசுசு காரையும் பெற்றதைத் தவிர அரசியலில் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்பதே பதிலாக இருக்கிறது.
கொஞ்ச நாளைக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது தினமும் ட்விட்டரில் அரசியல் நடத்திய கமல்கூட இப்போது சைலண்ட் ஆக இருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் நான் வருவேன் என்று சொல்லிக்கொண்டிருந்த கமல், நின்றுபோயிருந்த தனது இரண்டு திரைப்பட வேலைகளிலும் பிஸியாகிவிட்டார் என்கிறார்கள்.
அரசியலுக்கு வருவேன் என்று கூறியதால், நின்றுபோன படங்களை முடிக்கத் தேவையான நிதி கிடைத்துவிட்டதா என்றுகூட சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
அது இருக்கட்டும். இப்போது ரஜினி அரசியலுக்கு வருவேன் என்கிறாரே. வந்தால் என்னதான் மாற்றம் ஏற்படப்போகிறது என்று கேட்பவர்களுக்கு, ரஜினி சார்பில் நாம் ஒரு கேள்வியை முன் வைப்போம்.
இந்தியாவில் அரசியலுக்கு வருகிறவர்கள் எல்லோரும் தாங்கள் வந்தால் எதைச் செய்வோம் என்றார்களோ அதையெல்லாம் செய்து முடித்துவிட்டார்களா?
மோடி வரும்போது என்ன சொன்னார்கள்? மோடி பிரதமரானால், சீனா பயப்படும். பாகிஸ்தான் பதுங்கு குழிக்குள் படுத்துவிடும் என்றெல்லாம் சொன்னார்கள். பொருளாதாரத்தில் இந்தியா முதலிடத்துக்கு வந்துவிடும் என்றார்கள். மொத்தத்தில் புதிய இந்தியாவை மோடி பிரசவிப்பார் என்றார்கள்.
நிலைமை என்ன? பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைக்குள்ளும், இந்தியா பாகிஸ்தானை எதிர்த்தும் சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றன. சீனாவோ, இந்திய எல்லையை தனது எல்லை என்று இந்திய ராணுவத்தை அப்புறப்படுத்துகிறது. பொருளாதாரமோ, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட பெருமளவு சரிந்துவிட்டது. இதுதான் மோடியின் புதிய இந்தியாவா என்று இப்போது கேட்கிறார்கள்.
இதோ காங்கிரஸ் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இப்போது புதிய அரசியல் கட்சியை ரஜினி தொடங்கினாலோ, கமல் தொடங்கினாலோ, தினகரன் தொடங்கினாலோ யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.
பொதுத்தேர்தல் வந்தால், திமுகவை ஆதரிப்போரில் பெரிய மாற்றம் இருக்கும் என்று சொல்ல முடியாது. புதிதாக யார் கட்சி தொடங்கினாலும், அவர்களுக்கான வாக்காளர்கள் அனைவரும் ஏற்கெனவே யாரேனும் ஒருவருக்கு ஆதரவாக வாக்களித்தவராக இருக்கிறார்கள்.
2016 தேர்தலில் புதிய வாக்காளர்கள் ஒரு கோடிப் பேருக்கு மேல் இருப்பதாகவும், அவர்களை குறிவைத்து மக்கள் நலக்கூட்டணி பிரச்சாரம் செய்யும் என்றும் அறிவித்தார்கள். ஆனால், மக்கள் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளை மட்டுமே குறிவைத்து வாக்களித்தார்கள்.
இப்படி இருக்கும் தமிழக அரசியலில் அதிமுகவின் இரண்டு பிரிவுகளுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை கவரும் சக்தி யாரேனும் புதிய தலைவருக்கு இருக்குமா என்பதே இப்போதைய கேள்வியாக இருக்கிறது.
அதிமுகவில் இருப்பவர்கள் யாரும் ரஜினி ரசிகர் இல்லை. திமுகவில் ஓரளவு இருக்கிறார்கள். இவர்கள் தவிர ரஜினியை முன்பு ரசித்தவர்களும், இப்போதும் ரசிப்பவர்களும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது கணக்கிடப்படவில்லை. ரஜினி ரசிகர்களில் பலர் பல்வேறு கட்சிகளில் ஏற்கெனவே பொறுப்புகளைப் பெற்று இருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில் ரஜினி கட்சி தொடங்கினால், அவர் நினைக்கிற மாதிரி நேர்மையான, ஊழல் புகார் இல்லாத, அரசியல் கட்சி நடத்தும் ஆற்றல் மிக்க, கட்சிப் பதவிகளை காசுக்கு விற்காத, முதலீடு செய்து, செய்த முதலீட்டை லாபத்துடன் சம்பாதிக்கும் நோக்கமில்லாத ஆட்கள் எங்கிருந்து வருவார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாக எழுகிறது.
இந்தக் கேள்வி ரஜினிக்குள்ளும் எழுந்திருக்கும். அதற்கு அவரும் ஒரு பதிலைக் கண்டுபிடித்திருப்பார். ரஜினியின் அறிவிப்பு செயல்வடிவம் பெறும்போது நிச்சயமாக தமிழகத்தில் ஏதேனும் மாற்றம் பிறக்கும் என்று நாமும் நம்புவோம்.
- ஆதனூர் சோழன்