Skip to main content

நெல்லை எம்.பி. சீட் யாருக்கு ?

Published on 20/02/2019 | Edited on 04/03/2019

னைத்துக் கட்சி ஏரியாக்களிலும் எம்.பி. தேர்தல் காய்ச்சல் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. நெல்லை எம்.பி. தொகுதி சீட்டைக் குறி வைத்திருக்கும் மாவட்ட அ.தி.மு.க.புள்ளிகள் பலர் ரொம்பவே நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நடுக்கத்திற்குக் காரணமான முதல் புள்ளி, மாஜி அ.தி.மு.க. அமைச்சரும் பா.ஜ.க.வின் இப்போதைய மாநிலத் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன்.

ஜெ. அமைச்சரவையில் சசிகலாவின் ஆதரவோடு செல்வாக்கு மிகுந்த தொழில்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். அதே ஜெயலலிதாவின் குணாதிசயப்படி, டம்மியாக்கப்பட்டவர். கொஞ்ச காலம் அமைதியாக இருந்தவர், ஜெ.மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்ததும் எந்தக் கட்சிக்குத் தாவலாம் என்ற யோசனையில் இருந்தபோதுதான் நயினார் நாகேந்திரனுக்கு வலை வீசியது பா.ஜ.க.

டெல்லியில் மோடி முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் ஐக்கியப்படுத்திக் கொண்ட நயினார் நாகேந்திரனுக்கு, மாநிலத் துணைத் தலைவர் பதவியும் வழங்கப் பட்டது. இது போக ராஜ்யசபா எம்.பி.யாக்குவதாக வாக்குறுதியையும் கொடுத்தது பா.ஜ.க. மேலிடம். மோடி ஆட்சி முடியப் போகும் இந்த நேரம் வரை ராஜ்யசபா எம்.பி. ஆக முடியாததால், லோக்சபா எம்.பி.யாகி விடுவது என்ற கணக்கில் நெல்லை தொகுதியைக் குறி வைத்து கோதாவில் குதித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.

nellai-mp-seat



நெல்லை மாவட்டத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கை, பா.ஜ.க. மேலிடத்திடம் நிரூபிப்பதற்காகவும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்காகவும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிப்.12-ஆம் தேதி நெல்லைக்கு வரவழைத்து, பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தார் நயினார் நாகேந்திரன். ஆனால் திடீரென தனது புரோக்கிராமை உ.பி.முதல்வர் கேன்சல் செய்துவிட்டதால், கொஞ்சம் அப்செட்டானாலும் அசராமல் அடுத்த ஸ்டெப்பை வைத்திருக்கிறார் நாகேந்திரன்.

அ.தி.மு.க. தலைமையிடம் நெல்லை தொகுதியை கேட்டு வாங்கும்படி, பா.ஜ.க.வின் டெல்லி மேலிடத்திடம் கோரிக்கை வைத்திருக்கும் நயினார் நாகேந்திரன், தேர்தலுக்கு தாராளமாக செலவு செய்யத் தயார் என்பதையும் சுட்டிக் காட்டி யிருக்கிறார். பா.ஜ.க. மேலிடமும் பச்சைக் கொடி காட்டிவிட்டதால், உற்சாகமாக இருக்கிறார்.

இவரின் உற்சாகம்தான், நெல்லை தொகுதியைக் குறி வைத்திருக்கும் அ.தி.மு.க. புள்ளிகளின் உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டி ருக்கிறது. தொகுதியின் இப்போதைய எம்.பி. பிரபாகரன், மாவட்ட ஜெ.பேரவைத் தலைவர் ஏ.கே. சீனிவாசன் ஆகியோர் எப்படியும் சீட்டை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால் இவர்களையெல்லாம் ஓவர்டேக் பண்ணி, சீட்டைக் கைப்பற்றி விடலாம் என்ற அதீத நம்பிக்கையில் இருக்கும் மனோஜ்பாண்டியன், "தொகுதியை பா.ஜ.க.விற்கு தாரைவார்த்து விடாதீர்கள்' என இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

அதே அ.தி.மு.க. புள்ளிகளின் உறக்கத் தைக் கெடுக்கும் அடுத்த புள்ளி வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன். டெல்லியில் தனக்கான காரியங்களை சாதிப்பதற்காகத் தான், ஜெ.விடம் தனக்கிருக்கும் செல்வாக் கைப் பயன்படுத்தி, சசிகலா புஷ்பாவை ராஜ்ய சபா எம்.பி.யாக்கினார் வைகுண்டராஜன். ஆனால் சசிகலாபுஷ்பாவோ, தன்னை ஸ்டெடி யாக்கிக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி னார், திடீரென ஜெ.வுக்கு எதிராக சீறினார், தி.மு.க. எம்.பி. ஒருவருடன் நெருக்கமானார், கணவரை விவாகரத்து செய்தார், பேராசிரியர் ஒருவரை மறுமணம் செய்துகொண்டார்.

இதையெல்லாம் பார்த்து வைகுண்ட ராஜன் கடுப்பில் இருந்த போதுதான், கார்னெட் மணல் ஏற்றுமதிக்கு ஆப்பு அடித்தது மத்திய அரசு. சில மாதங்களுக்கு முன்பு, வி.வி.மினரல்சில் ஐ.டி.ரெய்டு, ஏகப்பட்ட டாக்குமெண்ட்டுகள் கைப் பற்றல், இவற்றால் ரொம் பவே நொந்துவிட்டார் வைகுண்டராஜன்.

இந்த மாதிரி சோதனைகளையெல்லாம் சமாளிக்க வேண்டும் என்றால், தனது மூத்தமகன் சுப்பிரமணியனை எம்.பி.யாக்கினால்தான் சரிப்படும் என்ற முடிவோடு, தனது சம்பந்தி மூலமாக சுப்ரமணிய சுவாமியை அப்ரோச் செய்திருக்கிறார் வைகுண்டராஜன். "இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு' என குஷியான சுவாமியும், வைகுண்ட ராஜனுக்காக பா.ஜ.க. மேலிடத்திடம் காய் நகர்த்தி வருகிறார்.

அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணியில் அ.ம.மு.க.வும் இணைந்துவிடும் என்ற நம்பிக்கையில் தான், தனது மகனுக்காக, நெல்லை எம்.பி. தொகுதியை குறி வைத்திருக்கிறார் தினகரனின் ஆதரவாளரான வைகுண்டராஜன்.

நயினார் நாகேந்திரனாலும் வைகுண்ட ராஜனாலும் அ.தி.மு.க. புள்ளிகள் நிம்மதியைத் தொலைத்திருக்கும் நேரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு குடைச்சல் கொடுக்க களம் இறங்கியிருக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன். இது குறித்து நெல்லை மாவட்ட பா.ஜ.க.புள்ளிகள் சிலரிடம் பேசினோம். ""இந்த தொகுதியை நயினார் நாகேந்திரன் குறிவச்சிருந்தாலும், மாநிலத் தலைவர் என்ற வகையிலும், தொகுதியில் நாடார் ஓட்டுகள் அதிகம் இருப்பதாலும், தமிழிசை அக்காவுக்கு கண்டிப்பா சீட் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் இந்தத் தொகுதி எங்க கட்சிக்குத்தான்''’என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

நெல்லை புகழ் அல்வா, யாருக்கு யார் கொடுப்பார்கள் என்பதுதான் லேட்டஸ்ட் ஸ்வீட் பேச்சு.