Skip to main content

கர்நாடகாவை கலக்கும் குமாரசாமியின்

Published on 14/11/2017 | Edited on 14/11/2017
கர்நாடகாவை கலக்கும் குமாரசாமியின் ஒரு கோடி ரூபாய் சொகுசுப் பேருந்து 



எதிர்வரும் 2018-ஆம் ஆண்டு மே மாதம் கர்நாடக மாநில சட்ட மன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத்  தேர்தலில் மக்களை கவர்வதற்காகவும், வாக்குகளை பெறுவதற்காகவும் மாநில ஆளும் கட்சியான காங்கிரஸ், மத்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் கர்நாடக முதல்வருமான குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அனைத்து  அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்துக்காக திட்டம் தீட்டி வருகிறார்கள்.



பெரும்பாலும் மலைப்பகுதிகளைக் கொண்ட 27 மாவட்டங்களை உள்ளடக்கிய கர்நாடக மாநிலத்தில் உள்ள 225 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிக்க தேவையான நேரம் இருக்காது என்பதால், ஒவ்வொரு ஊரிலிருந்தும் அடுத்த ஊருக்கு போவதற்குள்ளாகவே தனது தேவைகளை முடித்துக்கொண்டு, அடுத்த கூட்டத்துக்கு தயாராவாதற்கு வசதியாக ஒரு கோடி ரூபாயில் புதிதாக பேருந்து ஒன்றையும் வடிவமைத்துள்ளார் முன்னாள் முதல்வர் குமாரசாமி. இதற்கென தனியாக ஒரு அசோக் லைலாண்டு பேருந்து சேஸ் ஒன்றை வாங்கி அதை கரூரில் உள்ள ஒரு பட்டறையில் விட்டு 'பாடி' கட்டியுள்ளனர். பின்னர், சேலம் ஐந்து ரோட்டில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் இருக்கும் செந்தில் என்பவரின், “ஸ்பேஸ் டெக்” என்ற கேரவன் சொகுசு வேன்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் நிறுவனத்தில் கொடுத்து குமாரசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயன்பாட்டுக்கான பேருந்தை வடிவமைத்துள்ளனர்.



சமையலறை, கழிப்பறை, குளியலறை, முகச் சவரம் செய்து கொள்ள வசதியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாய்வு நாற்காலி, படுத்து ஓய்வெடுக்க குளிரூட்டப்பட்ட படுக்கையறை, கட்சிக்காரர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இரண்டு சோபாக்களுடன் கூடிய ஓய்வறை, வேட்பாளர் மற்றும் குமாரசாமி இருவரும் பேருந்தின் மேல் பகுதிக்கு சென்று மக்களை பார்ப்பதற்கு ஏற்ற வகையில் ரிமோட்டில் இயங்கும் லிப்ட், ரிமோட் வசதியுடன் கூடிய நகரும் படிக்கட்டுகள், குமாரசாமியின் பேச்சு மற்றும் பிரச்சார காட்சிகளை படம் பிடிக்கவும், அவற்றை எடிட் செய்து ஒளிபரப்பவும் வசதியாக ஒரு அறை என பிரமிக்கவைக்கும் பல வசதிகளை இந்த பேருந்தில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.



நான்கு மாதம் நடைபெற்ற, முழுநேரமும் வேலை பார்த்த ஸ்பேஸ் டெக் நிறுவனத்தினர் கடந்த மாதம் 23-ஆம் தேதி அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டுபோய் பெங்களூரில் கொடுத்துவிட்டு வந்துள்ளனர். இந்தப் பேருந்தின் உள்ளே இருக்கும் வசதிகளைப் பார்த்த பெங்களூர் செய்தியாளர்கள் பிரமித்துப் போயுள்ளனர்.



“இந்த பேருந்துக்கு எவ்வளவு செலவு...”? என்று கேட்ட செய்தியாளர்களிடம் ஒரு விரலை காட்டிவிட்டு சென்றுள்ளார் குமாரசாமியின் உதவியாளர்.

“பேருந்தில் உள்ள வசதிகளை பார்க்கும் போது அவர் சொன்ன தொகை குறைவானதுதான் சார்...” என்கிறார்கள் பெங்களூர் செய்தியாளர்கள்.



தமிழ் திரைபட நடிகர் ஜீவா பயன்படுதும் வேன், மலையாள நடிகர் பிரிதிவிராஜின் அண்ணன் பயன்படுத்தும் வேன் உள்ளிட்ட பல கன்னட  திரைப்பட நடிகர்களுக்கு கேரவன் வேன்களை வடிவமைத்து கொடுத்துள்ள “ஸ்பேஸ் டெக்” நிறுவனத்தினர், வாசிங் மெசின், தொலைக்காட்சி உள்ளிட்ட மொபைல் வீடுகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக் கொண்டுபோகும் வசதியுடன் கூடிய வீடுகள் மற்றும் குதிரைகள் கொண்டுசெல்லும் வேன்கள் மற்றும் விபத்தில் அடிபடும் மக்களின் உயிர்களை காக்கும் வகையில் மொபைல் ஆம்புலன்ஸ் வண்டிகளையும் வடிவமைத்து வருகின்றனர். மொத்தத்தில், ஓட்டுக் கேக்க மட்டும்தான் இதுவரை தங்கள் வசதிகளிலிருந்து இறங்கி மக்களின் தெருவுக்கு வந்தனர் அரசியல்வாதிகள். இப்பொழுது, ஓட்டுக் கேக்கவும் சொகுசாய் வருகின்றனர்.   



பெ.சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்

 
News Hub